எசப்பாட்டு

0
1101

பெங்களூரு ஜெகஜீவன்ராம் நகர் மாரியம்மன் கோயிலில் கடந்த 16ஆம் தேதி ஆடி வெள்ளி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி இசைக்கச்சேரி நிகழ்ச்சிக்கு அப்பகுதி மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர். கச்சேரிக்கு காவல்துறையிடம் உரிய அனுமதியும் பெறப்பட்டிருந்தது.
ஆனால், விழாவில் தமிழ்பாடல்கள் பாட கன்னட ரக்ஷிண வேதிகா என்ற இனவெறி அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு பாடகர்களை தாக்கினர். ஸ்பீக்கர்கள், இருக்கைகளை சேதப்படுத்தினர். தட்டிக்கேட்டவர்களும் தாக்கப்பட்டனர். மேலும், ‘கர்நாடகத்தில் தமிழ்ப்பாடல்களை பாடினால் இந்த கதிதான் ஏற்படும்’ என்று மிரட்டினர்.
விழாவில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போதும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கைக்கட்டி வேடிக்கை பார்த்தனர் என அங்கிருந்தோர் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்பு ஆண்டுதோறும் தமிழ் படங்களை வெளியிட்ட திரையரங்குகளில் கலவரம் செய்வது கன்னட அமைப்பினரின் வேலையாக இருந்தது. இப்போது தமிழ் பகுதியில் நடந்த தமிழர் விழாவில் புகுந்து வெறியாட்டம் ஆடியுள்ளனர்.
மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்ட நிலையில் பெங்களூரு தமிழர்கள் மிகுந்த பகுதியாக இருந்தது. அதற்கு முன்பு வரலாற்று காலத்திலேயே வெங்காலூர் என்ற பெயரில் தமிழர் நகரமாகவே இருந்தது. மாநில பிரிவினையால் இன்று கன்னட நகரமாகிவிட்டது. என்றாலும், இருக்கும் தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டிய கர்நாடக அரசின் கடமை அங்கு முறையாக நிறைவேற்றப்படாமல் இருப்பதாக தமிழர் பகுதியை சேர்ந்தவர்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.
இதற்கு முன்பு காவிரி நதிநீர் பங்கீட்டில் பிரச்சினை ஏற்பட்ட போதும் காவலர்கள் முன்னிலையிலேயே தமிழர்கள் தாக்கப்பட்டதை இதற்கு ஆதாரமாக கூறுகிறார்கள்.


இதேபோல், திருச்சியில் ஒரு உணவகத்தில் இந்திப்பாடல்களை ஒலிபரப்பச்சொல்லி வட இந்திய இளைஞர்கள் தகராறு செய்துள்ளனர். தஙக்ள் மொழி பாடல்களை கேட்கும் விருப்பம் தவறில்லை எனினும், இந்தி தெரியாத தமிழர்களின் பூமியில் அந்தப்பாடல்களை தமிழர்களால் முழுமையாக ரசிக்க முடியுமா என்பதை அவர்களால் உணரமுடியவில்லை.
பொதுவாக கலை மொழிகளை தாண்டிய அனுபவம். காற்றில் பிறக்கும் இசை காற்றைப்போலவே யாவருக்கும் பொதுவானது என்பதை தமிழர்கள் உணர்ந்தே இருக்கின்றனர்.
சுதந்திரத்துக்கு முன்பு தமிழில் எடுக்கப்படும் படங்களை சேர்ந்தாற்போல் தெலுகு மற்றும் ஹிந்தி மொழிகளில் எடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
இந்திப் பாடல்களை தமிழர்கள் ரசித்தனர். இன்னும் சொல்லப்போனால், இந்தி பாடல்கள் தமிழகத்தில் பெரும் ஆதிக்கமே செலுத்தியது.
இந்தி எதிர்ப்பு போராட்டம் இங்கு நடந்துகொண்டிருந்த போது கூட ஆராதனா படத்தில் எஸ். டி. பர்மன் இசையமைத்த பாடல்கள் தமிழக வானொலிகளில் ஒலித்தன. இந்தி பாடல்களின் ஆதிக்கத்தை தடுக்க பெரிதும் கலையுலகத்தினர் போராட வேண்டிவந்தது.
ஆனால், அதற்கு தமிழர்கள் வெறுப்புணர்ச்சியை எதிர்ப்பாக கொள்ளவில்லை. நல்ல தமிழ் பாடல்களை இசையமைத்து தயாரித்து ரசிகர்களை கவர்ந்ததன் மூலமாக நேர்மறையான முயற்சியை மேற்கொண்டனர்.


ஜி.ராமநாதன், கே வி மகாதேவன், எ எம் ராஜா,விஸ்வநாதன் ராமமூர்த்தி, சுப்பையா நாடுயு, சுதர்சனம் டி ஆர் பாப்பா போன்றவர்கள் அதற்காக பாடுபட்ட இசைக்கலைஞர்கள். இளையராஜ வரும் வரை இந்திப்பாடல்களை உதடுகளில் தவழவிடாத தமிழக இளைஞர்கள் இல்லை. ஆனால், தமிழ் பாடல்களை அந்த மொழியிலிருந்து பிரிந்த கிளை மொழியை பேசும் கன்னடர்களே வெறுக்கும் நிலை இப்போது ஏற்பட்டுள்ளது.
மொழி வெறுப்பு என்பது இன வெறுப்பின் அடையாளமே. இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக இந்த வேற்றுமை உணர்வு மேலோங்கிவருகிறது. குறிப்பாக தமிழர்களின் மீது மொழித்திணிப்பு, மொழி ஆதிக்கம் நிலைநாட்டப்படுகிறது.
கர்நாடகாவில் தமிழ்பேசும் மக்கள் மிகுதியாக வாழும் பகுதிகளிலும் கன்னட மொழியிலேயே பாடஙக்ளை பயிலவேண்டுமென்று கர்நாடக அரசு உத்தரவிட்டது. ஆதிமுதல் அங்கு வாழும் தமிழர்களுக்கும் வேலை வாய்ப்பில் சொந்த மக்களுக்குரிய முன்னுரிமை இல்லாமல் போனது.
இது தமிழுக்கே உரித்தான தனித்துவத்தை கண்டு பொறாமையால் செய்யப்படும் அநீதி என்றாலும், தமிழ் மக்களின் வாழ்வுரிமை, அடிப்படை பேச்சு, எழுத்துரிமை பாதிப்படைகிறது.
தமிழர் வாழும் பகுதிகளில் சுதந்திரமாக தங்கள் குடும்ப, கலாச்சார விழாக்களை கொண்டாட முடியாத அச்சம் நிலவுகிறது. சொந்த மாநிலத்திலேயே வேற்று மொழி பாடலை ஒலிபரப்புமாறு தகராறு செய்யுமளவு பிறருடைய ஆதிக்கம் இருப்பது வேறு எங்கும் இல்லாத நிலை.
இத்தகைய சினிமா பாடல்களால் ஏற்படும் தகராறு மொழி வெறுப்பின் விளைவே. எனவே, இதை கவனத்தில் எடுத்து பிற மாநிலத்தில் வாழும் தமிழர்களின் உரிமைக்காக தமிழக அரசு குரல் கொடுக்கவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here