அரியலூர் மாவட்டம் கீழப்பளூவூர் அருகே உள்ள மரவனூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 70). இவருக்கு அமராவதி என்ற மனைவி உள்ளார். இவரது ஒரே மகன் செந்தில்குமார் (40) மனைவி பாப்பாத்தியுடன் பக்கத்து தெருவில் வசித்து வருகிறார். விவசாய வேலை பார்த்து வந்த செல்லமுத்து சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவரால் வேலைக்கு சரியாக செல்ல முடியவில்லை. எனவே மருத்துவ சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாமல் அவதிப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் ஏற்கனவே மகன் செந்தில்குமாருக்கு செல்லமுத்து 5 பவுன் நகை செய்து கொடுத்திருந்தார். எனவே அதை தற்போது கொடுத்தால் வைத்திய செல வுக்கு உதவும் என நினைத்தார். இதனால் மகன் செந்தில்குமார் வீட்டிற்கு சென்று பணம் அல்லது நகையை கொடுத்து உதவும்படி செல்ல முத்து கேட்டுள்ளார். ஆனால் செந்தில்குமார் தன்னிடம் பணமும் இல்லை, நகையும் இல்லை என கூறி விட்டார். இதனால் தந்தைக்கும் மகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சினை இருந்து வந்தது.
நேற்று செல்லமுத்துவின் சித்தி செல்லம்மாள் என்பவர் இறந்து விட்டார். இதை துக்கம் விசாரிப்பதற்காக செல்லமுத்து சென்றார். அப்போது அந்த வழியாக ஏற்கனவே துக்க வீட்டிற்கு சென்று விட்டு அவரது மகன் செந்தில்குமார் மனைவி பாப்பாத்தியுடன் வந்து கொண்டிருந்தார்.
அவர்களுடன் உறவினர்கள் பழனியாண்டி, வள்ளி ஆகியோரும் வந்து கொண்டிருந்தனர். வழியில் மாணிக்கம் என்பவரது வீட்டின் அருகில் வந்தபோது செல்லமுத்து மகன் செந்தில்குமாரிடம் மீண்டும் மருத்துவ சிகிச்சைக்கு பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது செந்தில்குமாரும் அவருடன் வந்த உறவினர்களும் செல்லமுத்துவை தாக்கி தள்ளி விட்டுள்ளனர். இதில் செல்லமுத்து எதிர்பாராதவிதமாக மயங்கி விழுந்து இறந்தார். இது குறித்து போலீஸ் துணை சூப்பிரண்டு இளஞ்செழியன், இன்ஸ்பெக்டர் சிங்காரவேலன் ஆகியோர் கொலை வழக்குபதிவு செய்து செல்லமுத்துவின் மகன் செந்தில்குமார் உறவினர் பழனியாண்டி ஆகியோரை கைது செய்தனர்.
செந்தில் குமாரின் மனைவி பாப்பாத்தி, பழனியாண்டியின் மனைவி வள்ளி ஆகியோரை தேடி வருகிறார்கள். செல்லமுத்துவின் உடலை பிரோத பரிசோத னைக்காக அ ரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ செலவுக்கு பணம் கேட்ட தந்தையை மகனே அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்ப டுத்தி உள்ளது.