கொரோனா நிவாரண நிதிக்காக ‘பி.எம். கேர்ஸ்’ என்ற கணக்கை பிரதமர் மோடி தொடங்கினார்.
இது ஒரு தனியார் சேரிட்டபிள் டிரஸ்ட். இதன் மூலம் பெறப்படும் நிதி குறித்து யாரிடமும் கணக்கு காட்டவேண்டிய அவசியம் இல்லை. தகவல் உரிமை சட்டத்தின் வரம்புக்குள்ளும் வராது. அரசின் எந்த தணிக்கையாளர்களும் இந்த நிதி செலவழிக்கப்படும் விதத்தைக் கேள்வி கேட்கவே முடியாது எனத் தகவல் வெளியானதால் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.
காங்கிரஸ் கட்சி ட்விட்டர் பக்கத்தில், ‘பிஎம் கேர்ஸ் நிதியில் முரண்பாடுகள் இருக்கின்றன. வெளிப்படைத்தன்மை இல்லை. ரகசியம் எப்போதும் கெட்ட விஷயங்களுக்கான வழி’ எனப் பதிவிடப்பட்டது.
இந்நிலையில், பிரதமரின் நிதி தொடர்பாக மக்களிடம் தவறான கருத்துகளை பரப்பியதாக காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா மீது கர்நாடக மாநிலத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்குரைஞர் பிரவீன் என்பவர் புகாரின்பேரில் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கை சோனியா பராமரிப்பதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.