தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து விருதுநகர் வரையிலான ரயில் நிலையங்கள், ரயில் வழித்தடங்களில் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பேட்டி அளித்தார்.
அப்போது, ‘ 2022ஆம் ஆண்டுக்குள் மின்மயமாக்கல் திட்டம் நிறைவு பெறும். அந்த கால கட்டத்திற்குள் செங்கோட்டை _ புனலூர் பாதை மின்மயமாக்கலும் முடிவுறும். புதிய ரயில் பாதைகள்அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தல் தமிழகத்தில் முக்கிய பிரச்சனையாக உள்ளது. நிலம் கையப்படுத்தல் சட்டத்தின் கீழ் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. அடுத்த சில தினங்களில் இதற்கான அமர்வு உள்ளது. அதன் பின்னர் இந்த பிரச்சனை தீரும். அதையடுத்தே புதிய லைன்கள் அமைக்கும் பணிகள் குறித்து ஆலோசிக்கப்படும்’ என்றார்.
செங்கோட்டையில் ரயில்நடை மேடைகள், சிக்னல் அறை என பல பகுதிகளில் ஆய்வு செய்தவர், ‘செங்கோட்டை ரயில் நிலையம் மிக அழகாக பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், இங்குள்ள மெக்கானிக் பிரிவினர் பல விதமான பொருட்களை கண்காட்சியாக வைத்துள்ளனர். ரயில்வே பாதுகாப்பு குறித்த ஆலோசனைகளை ரயில் பயணிகள் சங்கம் மற்றும் பல சமூக அமைப்பினர் தரும் ஆலோசனைகளையும் கேட்டு வருகிறோம். சுற்றுலா வளர்ச்சிக்காக கொல்லம் _ செங்கோட்டை விஸ்டாடம் கோச் இயக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது’ என்றார்.
கொல்லம் – தாம்பரம் விரைவு ரயிலை பாம்புகோவில் சந்தை ரயில் நிலையத்தில் நிறுத்தவேண்டி வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மனோகரன் பொது மேலாளரிடம் கோரிக்கை மனு அளித்தார்.















