2004 ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகமும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய பன்னாட்டு திருக்குறள் மாநாட்டில் சிகாமணி எழுதி நா.தனராசனால் வாசிக்கப்பட்ட கட்டுரை.
திருக்குறள் நீதி நூல் மட்டுமன்று அது ஒரு வாழ்வியல் நூல். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதனுக்காக மட்டுமல்ல, இருபத்தோராம் நூற்றாண்டின் புதிய தலை முறையினர்க்கும் வழிகாட்டும் புரட்சி நூல். வள்ளுவத்தின் பொருண்மை காலந்தோறும் புதிய புதிய கருத்தாக்கங்களைத் தந்து, இனம், மொழி, நாடு என்னும் எல்லைகளைக் கடந்து
சங்க காலத்தைத் தொடர்ந்து தமிழுக்கும், தமிழர்க்கும் கிடைத்த அரிய களஞ்சியமான வள்ளுவத்தில் உலகளாவிய சிந்தனைகளும் மனிதனை உயர்த்தும் உயரிய நோக்கும் காணப்படுகிறது.
வள்ளுவம் ”தமிழனுக்குரியது” என்னும் நிலையைக் கடந்து உலகத்தவர் அனைவர்க்கும் உரியதாக உள்ளமையை உணர்ந்த பாரதி ”வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”, எனப் புகழ்ந்துரைத்தார். வள்ளுவப் பொருட் சிறப்பை அறிந்த மதுரைத் தமிழ் நாகனார் ”எல்லாப் பொருளும் இதன் பால் உள” என்று தெளிந்துரைத்துள்ளார்.
இவை வள்ளுவத்தின் காலமும் எல்லையும் கடந்து நுண்பொருட்ச் சிறப்பை உணர்த்துவன. வள்ளுவம் தான் தோன்றிய காலத்தோடு நின்று விடாமல் இந்த நூற்றாண்டு மனிதனுக்கும் வாழச்சொல்லிக் கொடுக்கிறது. வாழ்க்கையைச் சொல்லிக் கொடுக்கிறது. வள்ளுவம் இலக்கியம் என்னும் நிலையில் நின்று விடாமல் மனித வாழ்வியல் கூறுகளை காட்டும் பதிவுகளாக உள்ளது.இதனை
சராசரி மனிதன் அன்றாட வாழ்க்கையில் ஒழுகவேண்டிய நெறிமுறைகளின் தொகுப்பாகத் திருக்குறள் படைக்கப்பட்டுள்ளது. என்னும் அறிஞர் கருத்தினால் அறியலாம். வள்ளுவத்தில் உள்ள ஒவ்வொரு குறளும் மனித வாழ்க்கையின் நெறிகளை, வழிமுறைகளைத் தருவன.
மானிடப் பண்பு இயல்புகளுக்கு ஓர் உறைவிடமாய் – வாழ்க்கை, வழி நெறிமுறைகளுக்கான வழிகாட்டியாய் அமைந்துள்ளது திருக்குறள் என்னும் முத்தமிழ் அறிஞரின் கருத்தும் வள்ளுவம் ஒரு வாழ்வியல் நூல் என்பதை உறுதிப்படுத்துகிறது.












