சந்தேக கோடு சந்தோஷ கேடு என்பது உண்மை. இந்த சந்தேகம் குடும்ப நலனில் முழு அக்கறை காட்டும் தம்பதிக்கு வருவதில்லை. ஏனெனில், அவர்களுக்கு உடல்சார்ந்த உறவு அன்பின் வெளிப்பாடு. பிறருக்கோ, அது ஆசையின் ஈடுபாடு.
இளம் வயதினர் இடையே உறவுகள் புளித்து போகும் போது இது போன்ற குற்றச்செயல்கள் எழுகிறது. முதுமையிலும் அபூர்வமாக எழுகிறது என்றால் மனம் சார்ந்த கோளாறு என்பது உறுதியாகிறது.
சந்தேகம் என்பது கலாச்சாரத்தின் அடிப்படையால், ஒரு தனிநபருடைய குணாதிசயங்களால், சம்மந்தப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட சில பாதிப்புகளால் வெளிப்படும் நடவடிக்கை, முன்னெச்சரிக்கை, தற்காப்பு நடவடிக்கை என மனோதத்துவ நிபுணர்கள் வரையறுக்கிறார்கள்.
ஆனாலும், மனநிலைக்கோளாறால் மட்டுமின்றி, சூழ்நிலை, துணையின் குணாதிசயங்களாலும் சந்தேகம் ஏற்பட வாய்ப்புள்ளது.
அரண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல் சந்தேகப் படுபவர்களுக்கு, கணவனோ அல்லது மனைவியோ வேறு ஒரு பெண் அல்லது ஆணுடன் சாதாரணமாகப் பேசிக்கொண்டு இருந்தாலே அவர்களுக்குள் தவறான உறவு இருக்குமோ எனக் கருதி பிரச்னை செய்வார்கள்.
வெளியே போய்விட்டு வரும் கணவர், மனைவியை வாடை பிடிக்க, ஜாடை பேச்சு பேச, சந்தேக கேள்வி கேட்கத்தொடங்குவர். தோற்றத்தில், நடத்தையில், பேச்சில் ஏதேனும் வித்தியாசம் தென்பட்டால் உடனே பாயிண்டை பிடித்துக்கொள்வர்.
சந்தேகப்புத்தி யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளாது,இயல்பை அங்கீகரிக்காது. இந்த அல்ப சந்தேகம் அவர்களை மட்டுமல்லாது அவர்களது குழந்தைகளின் மனநிலை மற்றும் வாழ்வியல் சூழலை வெகுவாக பாதிக்கும். சில சமயங்களில் பிரச்னை கொலை அல்லது தற்கொலையில் போய் முடியும்.
எப்போதும் எதையாவது தேடுவது போல சுழலும் பார்வை, தன் உடைஅமையை யாராவது கைப்பற்றிவிடுவாரோ என்ற அச்சம் கொண்டவர்களாக சந்தேகப்பிராணிகள் இருப்பர். பிரச்சினை பற்றி கேட்கும் முன்பே விளக்கம் கொடுப்பார்கள். யாராவது தனக்கெதிரே நின்று பேசினால் தன்னைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பதாக நினைப்பார்கள்.
பேரனாய்டு பெர்சனாலிட்டி டிஸ்ஆர்டர் எனப்படும் இந்த மனப்பான்மையால் மனைவி அல்லது கணவனின் உடையை, கைப்பையை, மணி பர்சை ஆராய்வார்கள், வீட்டுக்கு வரும்போது உள்ளிருக்கும் துணையை பார்க்கும் முன்பு பின்புற வாசல், காம்பவுண்டுக்கு வெளீயே எட்டிப் பார்ப்பார்கள். வெளியே கிளம்பும் துணையை பார்த்து, அவர்கள் கிளம்பும் காரணம் தெரியும் என்பதுபோல் பேசுவர்.
சிலர் உண்மையிலேயே துரோகம் செய்யலாம். ஆனாலும், துரோகம் செய்பவரை துரத்த, அல்லது அவர்களை துறக்கத் தான் நமக்கு உரிமை உண்டே தவிர, அவர்கள் உயிரை பறிக்க உரிமை இல்லை.
குழந்தைகள், குடும்ப சுழ்நிலை கருதி பேசி, சமாதானம் செய்யவோ, சில நிபந்தனை அடிப்படையில் முடிவு எடுக்கவோ முயலவேண்டும். மனிதன் மனதால் வாழ்பவன். ஒருவனது மனநிலை பிறன் மனநிலை போல் இருக்காது. வாழ்ந்த சூழ்நிலையும் துணைகளுக்கு ஒரேப்போல் இருக்காது. பழகும் விதம், சுற்றத்தார் மனநிலை, நடத்தை போன்றவையும் சந்தேகம் ஏற்பட காரணியாகிறது. இதையெல்லாம் ஆராய்ந்தபின்பே ஒரு முடிவுக்கு வர முடியும். சொல்வதெல்லாம் உண்மை போல் ஒரு வித விசாரணைக்குள் சந்தேக தம்பதிக்கு தீர்வு வழங்கிவிட முடியாது.
முதலில் அவர்களே தங்களுக்குள் பேசி, பிரச்சினையை விளக்கி ஒரு முடிவு எடுக்கவேண்டும். ஒருவர் முடிவு பிறர் முடிவை பாதித்தால் உறவினர் உதவியை நாடவேண்டும். அதற்கும் அதிகமானால், சட்ட உதவியை நாடுவதே சரியாக இருக்கும், சட்டத்துக்கு புறம்பான வன்முறையால் அவர்களும் அழிந்து குடும்பமும் நடுத்தெருவில் நிற்கும்,.
அதேபோல், மாமியார், மாமனார், நாத்தனார் என சந்தேகத் தீயை ஊதிப்பெருக்கும் கும்பலிடமும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். அவர்கள் துணையை பற்றி சொல்லும் வார்த்தைகளை ஆராயாமல் நம்பிவிடக்கூடாது. தக்க சாட்சியம் இருந்தாலன்றி சந்தேகத்தை தூர வீசிவிடவேண்டும்.
வாழ்வில் அன்பு இல்லாவிட்டாலும், குடும்பம் நடத்தும் ஆற்றல் இல்லாவிட்டாலும் சந்தேகம் வருகிறது. அந்த சந்தேகம் பெண்கள் உயிருக்கே ஆபத்தாகிவிடுகிறது.
சந்தேகம் காதலுக்கு சத்துரு. தாம்பத்யத்தை சர்வநாசம் ஆக்கும் நஞ்சு. இரண்டிலும் சந்தேகத்துக்கு அதிகளவில் பலியாவது பெண்களே.
கடந்த ஓராண்டு காலத்துக்குள் தமிழ்நாட்டில் ஐம்பதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண்களின் சந்தேகத்துக்கு பலியாகியுள்ளனர்.
அளவோடு ஆசைப்படவேண்டும். தகுதியறிந்து நடக்க வேண்டும் . பிறரை மதிக்கப் பழகவேண்டும். இம்மூன்று பண்புகளும் இருந்தால் சந்தேகத்துக்கே வாய்ப்பில்லை.















