தமிழின் முன்னோடி எழுத்தாளர் அ. மாதவையா பிறந்த நாள்

0
1878

தமிழின் முன்னோடி எழுத்தாளர், நாவலாசிரியர், பத்திரிக்கையாசிரியர் என பன்முகம் கொண்ட அ. மாதவையா 1872ம் ஆண்டு ஆகஸ்ட் 16 தேதி திருநெல்வேலி அருகே உள்ள பெருங்குளம் என்ற கிராமத்தில் பிறந்தவர்.( தற்போது இக்கிராமம் துாத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)

தனது எழுத்தின் மூலம் சமூக சீர்திருத்தம் கொண்டு வருவதில் நம்பிக்கை உடையவர். பத்மாவதி சரித்திரம் என்ற புகழ் பெற்ற நாவலை எழுதியவர். ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் புலமைப் பெற்றவர்.

அ. மாதவையா, தன் பள்ளிப்படிப்பை திருநெல்வேலி மாவட்டத்தில் 1887ஆம் ஆண்டில் முடித்தார். சென்னையில் உள்ள கிறித்துவ கல்லூரியில் இளங்கலை மேற்படிப்பு தொடர்ந்தார். இங்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்றார். தன்னுடைய கல்லூரி முதல்வரான வில்லியம் மில்லரின் கருத்துக்களினால் கவரப்பட்டார்.

தன்னுடைய இளங்கலை படிப்பை (B.A) 1892 இல் முதல் மாணவராக முடித்தார் பட்டம் பெற்றதும் தான் பயின்ற சென்னை கிறித்துவக் கல்லூரியிலேயே ஆசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர், தனது குடும்பத்தை நடத்துவதற்காக, உப்பு சுங்க இலாகா (Salt and Abkari department) நடத்திய தேர்வில் முதலிடம் வந்து Salt Inspector ஆக ஆந்திராவில் உள்ள கஞ்சம் மாவட்டத்தில் பணியிலமர்ந்தார். அங்கு அவர் தெலுங்கு மொழியினையும் கற்றறிந்தார்.

மாதவையா தனது இருபதாம் அகவையிலேயே பத்திரிக்கைகளுக்கு எழுதும் பழக்கம் கொண்டிருந்தார். அவருடைய நண்பரான சி. வி .சுவாமிநாதையர் என்பவர் 1892 ஆம் ஆண்டு தொடங்கிய விவேக சிந்தாமணி என்ற பத்திரிக்கையில் சாவித்திரியின் கதை என்ற தொடரினை எழுதத் தொடங்கினார். ஆனால் அத்தொடர் இடையில் சில நாட்கள் தடைப்பட்டு பிறகு தொடர்ந்து வந்தது. அத்தொடர் 1903 ஆம் ஆண்டு முத்துமீனாக்ஷி என்ற பெயரில் நாவலாக வெளிவந்தது.

1898 ஆம் ஆண்டு பத்மாவதி சரித்திரம் என்ற நாவலின் முதற்பகுதியும், 1899 ஆம் ஆண்டில் இரண்டாம் பகுதியும் மாதவையாவால் எழுதப்பட்டது. 1925 ஆம் ஆண்டில் பஞ்சாம்ருதம் என்ற பத்திரிக்கை ஒன்றைத் தொடங்கினார். பத்மாவதி சரித்திரத்தின் மூன்றாம் பகுதியினை 1924 ஆம் ஆண்டு எழுதத் தொடங்கி, முழுமையடையாத தருணத்தில் மாதவையா மரணமடைந்தார்.

இதழாளர் அ. மாதவையா தமிழர் நேசன், பஞ்சாம்ருதம் ஆகிய இதழ்களை வெளியிட்டார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக மாதவையா 1925 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டார்.

அப்போது தமிழைக் கட்டாய பாடமாக இளங்கலை (B.A) பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று சொற்பொழிவினை நிகழ்த்தினார். சொற்பொழிவின் பொழுதே கீழே விழுந்து மரணமடைந்தார்.

அ. மாதவையாவுக்கு பதினைந்தாம் வயதிலேயே (1887) திருமணம் செய்யப்பட்டது. அவருக்கு, ஐந்து பெண் மற்றும் மூன்று ஆண் என்று எட்டு மகவுகள். அவருடைய பிள்ளைகளான மீனாக்ஷி தியாகராஜன், கிருஷ்ணன், முக்தா வெங்கடேஷ் என்ற முத்துலக்ஷ்மி ஆகியோர் பிரபலமானவர்கள். அறிவியல் எழுத்தாளர் பெ. நா. அப்புசாமி இவருக்கு அண்ணன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here