நாங்குநேரி: வாக்குப்பதிவை கண்காணித்த வெளியூர்க்காரர்கள்

0
1657

நாங்குநேரி தொகுதியில் வாக்குப்பதிவு நடந்த இன்றும் வெளியூர்க்காரர்கள் நடமாட்டம் கணிசமாக இருந்தது. இரு தரப்பிலும் எல்லோருக்கும் பணம் கொடுத்தபின்பும் பதற்றம் நீங்காமல் வாக்குப்பதிவையும் கண்காணிக்க ஆட்களை அமர்த்தினர். அரசியல் கட்சி தலைவர்களும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேர்தல் விதிமுறை மீறலில் தேவையின்றி ஈடுபட்டனர்.

நாகர்கோவில் எம்.பி. வசந்தகுமாரை கலுங்கடி செல்லவிருந்த நிலையில் கைதுசெய்து 3 பிரிவுகளில் வழக்கு போட்டனர். ரெட்டியார்பட்டி வாக்குச்சாவடி அருகே பேட்டி கொடுத்த காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி மீதும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகளை மீறி நுழைந்ததாக கிராம நிர்வாக அதிகாரி சுடலை முத்து அளித்த புகாரின் பேரில்  பெருமாள்புரம் காவல் நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஆனால், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆளுங்கட்சி எம்.எல்.ஏவான சதன் பிரபாகரை பிடித்தும் விட்டுவிட்டனர். பட்டப்பிள்ளை புதூரில் வாக்குச்சாவடி அருகே நின்றிருந்தவரை தாசில்தார் கலைமதி கண்டுபிடித்தார். அவரிடமிருந்து 1,76,000 பணமும் கைப்பற்றப்பட்டது. ஆனால், பணம் மேறொருவருடையது என்று கணக்கு காட்டி கதையை முடித்துக்கொண்டனர். எம்.எல்.ஏ. மீது வழக்கு போடப்படவில்லை.

அதேபோல், பரப்பாடி வாக்குச்சாவடிக்கு செல்லமுயன்ற எம்.பி. விஜிலா சத்யானந்த் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. காங்கிரசார் சாலை மறியல் செய்யப்போவதாக கூறியபின்பே அவர் வெளியேற்றப்பட்டார்.
இடைத்தேர்தல் களத்திலிருந்து அந்நிய மாவட்ட ஆசாமிகள் வெளியேறுமாறு தேர்தல் ஆணைய உத்தரவை கஅரசியல் கட்சியினர், குறிப்பாக ஆளுங்கட்சியினர் கிஞ்சிற்றும் மதிக்கவில்லை. குறிப்பாக, வெளி மாவட்ட ஆளுங்கட்சியினர் எல்லா பகுதியிலும் தென்பட்டனர்.இவையெல்லாவற்றையும் கடந்து வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது. வாக்குச்சாவடி அருகே சந்தித்துக்கொண்ட அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் கைகொடுத்துக்கொண்ட காட்சியும் கவர்ந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here