கோவையில் இன்று முழு ஊரடங்கு காரணமாக அனைத்து சாலைகளும் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இந்நிலையில் கோவை வெள்ளலூர் பகுதியில் செயல்பட்டு வரும் தந்தை பெரியார் பகுத்தறிவு படிப்பகத்தின் முன்பு அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை மீது யாரோ சில விஷமிகள் செருப்பு மாலை அணிவித்துள்ளனர்.
இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து இதுகுறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த திராவிட இயக்கங்களை சேர்ந்த நபர்கள் அங்கு ஒவ்வொருவராக வரத் தொடங்கினர்.
நேற்று இரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள சூழலில் பொதுமக்கள் யாரும் வெளிவராத நிலையில் பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து அவமதிப்பு செய்யப்பட்டிருந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து சென்ற மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.













