நெல்லை மாவட்டத்திற்குட்பட்ட வள்ளியூர், ராதாபுரம் பகுதிகளில் 25 க்கும் மேற்பட்ட குவாரிகள் இயங்கிவருகின்றன. இங்கிருந்தே கேரளாவுக்கு அதிக கற்கள் கடத்தப்படுகின்றன. அனுமதி சீட்டின்றியும், அதிக கோடு ஏற்றியும் தினமும் நிறைய லாரிகள் செல்கின்றன. இதில் பெரும்பான்மை லாரி இப்பகுதி ஆளுங்கட்சி பிரமுகருக்கு சொந்தமானவை.
இந்நிலையில், தமிழக கவர்னரின் இஸ்ரோ விசிட்டுக்கு பாதுகாப்புக்கு வந்த திருநெல்வேலி எஸ்பி சரவணன், ஏராளமான லாரிகள் சாலையோரம் நிறுத்தப்பட்டிருப்பதையும் சென்றுகொண்டிருப்பதையும் கவனித்தார். அவற்றை நிறுத்தி சோதனையிட்ட போது அனுமதியின்றியும், அளவுக்கதிகமாகவும் கற்களை ஏற்றி வந்தது தெரியவந்தது.
உடனடியாக 9 லாரிகளை எஸ்பி உத்தரவின் பேரில் பழவூர் போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் கைப்பற்றப்பட்ட 7 லாரிகள் சமீபத்தில் குவாரி பிரச்சினையில் சிக்கிய ஆளுங்கட்சி பிரமுகருக்கு உரிமையான லாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய பிரச்சினைகளை சமாளிக்கும் விதமாகவும், அரசு அதிகாரிகளின் நற்பெயரை பாதுகாக்கும் விதமாகவும் இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் விமர்சிக்கின்றனர்.








