விருதுநகரில், தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பு வீரர்களுக்கான தேர்வுகள், கே.வி.எஸ். பள்ளி மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இந்த தேர்வுகளில் சுமார் 3000க்கும் மேற்பட்ட தேர்வாளர்கள் கலந்து கொண்டனர். அசல் சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடல் தகுதி தேர்வு போன்ற சோதனைகள் நடைபெற்று வருகிறது.
மதுரை சரக காவல்துறை துணை தலைவர் காமினி தேர்வுகளை நேரில் பார்வையிட்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் உட்பட அதிகாரிகள் போட்டி ஏற்பாடுகளை கண்காணித்தனர். நேற்று மாலை காவலர் தேர்வில் கலந்து கொண்டவர்களுக்கு, ஆயிரத்து 500 மீட்டர் தகுதி ஓட்டப் போட்டிகள் நடைபெற்றது. இதில் தேர்வாளர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். போட்டியில் விருதுநகர் அருகே உள்ள அழகாபுரியை சேர்ந்த, மாரிமுத்து (21) என்ற வாலிபரும் கலந்து கொண்டு ஓடினார். ஓடிக்கொண்டிருந்து போது மாரிமுத்து திடீரென்று மயங்கி விழுந்தார்.
அங்கிருந்த போலீசார் உடனடியாக மாரிமுத்துவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் மாரிமுத்துவை சோதித்துப் பார்த்து, அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினார். காவலர் தேர்வில் கலந்து கொண்ட வாலிபர் திடீரென்று இறந்தது அங்கிருந்தவர்களை பெரும் அதிர்ச்சியடைய செய்தது. இது குறித்து விருதுநகர் மேற்கு காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














