திசையன்விளை போலீஸ் அத்துமீறல்: பட்டதாரி இளைஞர்மீது தாக்கு, தாயார் ஜாக்கெட் கிழிப்பு

0
4726

திசையன்விளை அருகே சப் இன்ஸ்பெட்கர் தாக்கப்பட்ட விடயத்தில் அவர் பொதுமக்களிடம் அத்துமீறலில் ஈடுபட்டது தற்போது தெரியவந்துள்ளது. போலீசாரால் தாக்கப்பட்ட இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரிடம் வாக்குமூலம் கூட பெறாமல், போலீசாரை தாக்கியதாக 4 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் திசையன்விளை பேரூராட்சி ஆர். சி .நந்தன் குளம. ஊரின் மத்தியில் புனித ராயப்பர் ஆலயம் உள்ளது. நேற்றிரவு ஆலயத்தின் காம்பவுண்ட் சுவர் அருகில் பொறியியல் பட்டதாரி கிங்ஸ்லி தனது நண்பர்கள் இருவருடன் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது இரு காவலர்களுடன் அந்தப் பகுதியில் ரோந்து சென்ற சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன், அவர்களிடமிருந்து செல்போனை பறித்து தங்களின் பைக்கில் வலுக்கட்டாயமாக கிங்ஸ்லியை ஏற்றியுள்ளனர். ’எந்தத் தவறும் செய்யாத என்னை ஏன் காவல் நிலையத்திற்கு அழைக்கிறீர்கள்?’ என்று கேட்டு பைக்கில் ஏற மறுத்த கிங்ஸ்லியை மூன்று போலீசாரும் சேர்ந்து தலைமுடியை பிடித்து கடுமையாக தாக்கியதாக தெரிகிறது.

இந்த சத்தம் கேட்டு வந்த கிங்ஸ்லியின் தாய் மற்றும் உறவினர்கள் போலீசாரிடம் ’ ஏன் அடிக்கிறீர்கள்?’ என்று கேட்டதற்கு எந்த பதிலும் சொல்லாமல் மேலும் கடுமையாகத் தாக்கியதாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர். தனது மகனை அடிக்க வேண்டாம் என கூறி தடுக்கச் சென்ற கிங் ஸ்லியின் தாயார் அன்னபெல்சியின் ஜாக்கெட்டையும் கிழித்து அவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

இளைஞரைத் தாக்கியதை சிலர் படமெடுக்க, அவர்கள் செல்போனையும், கிங்ஸ்லி செல்போனையும் போலீசார் பறித்துக்கொண்டு சென்றுள்ளனர். சுமார் 50 வீடுகள் மட்டுமே உள்ள ஒரு குக்கிராமத்தில், ஊரில் உள்ள கோயிலருகே சும்மா நின்றுகொண்டிருந்த இளைஞர்களை வம்புக்கிழுத்து தாக்கியதாக பொதுமக்கள் பொறுமுகின்றனர். தாக்குதலுக்கு உள்ளான கிங்ஸ்லி தற்போது ராதாபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் வாக்கு மூலம் பெறக்கூட முயலாத திசையன்விளை போலீசார், தங்களை தாக்கியதாக 4 பேர் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here