பண்டைக்காலத்தில் இயற்கை வணக்கத்தையடுத்து அச்சத்தின் காரணமாக அணங்கு, பேய் போன்றவற்றையும் தமிழர்கள் வணங்கினர் என்பர்.
கடல், கதிரவன், மலை, மரங்கள் என இயற்கையைக் கண்டு அஞ்சிய மனநிலையியிலிருந்து கொஞ்சம் தெளிந்து இவையெல்லாம் அச்சம் தௌவதாக அமைந்ததற்கு அவற்றில் உறைந்துநிற்கும் ஏதோ ஒரு சக்திதான் இதற்கு கார்ணம் என கருதிய தமிழர்கள், அப்படி இயக்கிய இயற்கை ஆற்றலை சூர் (அச்சம்) என்றும் அணங்கு (துன்பம்) என்றும் குறிப்பிட்டனர்.
தொடக்கத்தில் அவ்விரண்டு சக்திகளையும் உருவமற்றனவாக கற்பித்தவர்கள், நாளடைவில் அவற்றை பெண்ணுருவாக யூகித்தனர். அதற்கும் காரணம் உண்டு. ஆதி மனிதன் அல்லது தமிழனின் பார்வையில் ரத்தம் சிந்தி ஓருயிரை பெற்றெடுப்பதோடு, மாதந்தோறும் உதிரப்பெருக்கை தாங்கும் பெண்ணே உன்னத சக்தி மிகுந்தவளாக தெரிந்தாள். அதனால் தான் ஆதி தெய்வத்தை பெண்ணாக கொற்றவை (சக்தி) என்ற பெயரிட்டு வணங்கினர்.
மனிதனின் முதல் வசிப்பிடம் மலையகம் என்பதால், அங்கு ஆளரவமற்ற இடங்களில், அச்சம் தரும் இரவுகளில் கடவுள், சூர், அணங்கு, போன்றவை நடமாடும் என்ற நம்பிக்கை உருவானது. அணங்குடைச் சாரல், அணங்குடை நெடுங்கோடு, சூருடைச் சிலம்பு, சூர் உறை வெற்பு என்று அவை தங்கிய மலை, சோலைப்பகுதிகள் சுட்டிக் காட்டப்பட்டன. பின்னர் அணங்குடை முந்நீர், சூருடை சுனைகளை கண்டார்கள். அணங்கு வேண்டிய உருவெடுத்து வரும் என்பது
‘சூருடைச் சிலம்பில் சுடர்ப்பூ வேய்ந்து
தாம்வேண்டு உருவில் அணங்குமார் வருமே .. .. (அகநானூறு. 158)’ என்ற பாடல் மூலம் அறியலாகிறது. இன்றும் முனி, மோகினி, அணங்குகள் அழகிய பெண்ணுரு தாங்கி இரவு வழிபோகும் வாலிபர்களை அரவணைத்துக் கொல்லும் கதைகள் ஊர்களில் உலவுகின்றன.
மலைப்பகுதியான குறிஞ்சியிலிருந்து இறங்கிய அணங்கும் சூரும் முல்லை நிலமாகிய காடுகளுக்கு இடம்பெயர்ந்தன. உண்மையில் மனித கூட்டம் தான் மேய்ச்சல், விவசாயம் போன்ற தொழில்களுக்காக மலையை அடுத்த சமவெளியான முல்லை நிலத்துக்கு வந்தனர். அவர்கள் தெய்வங்களை அங்கும் கொண்டுவந்தனர்.

முல்லை நிலத்துக்கு வந்தபோது அணங்கு கானமர் செல்வி (அகநானூறு. 345) என்றும் காடுறை கடவுள் (பொருநராற்றுப்படை 42) என்றும் அழைக்கப்பட்டாள். அவளே, பெருங்காட்டுக் கொற்றி (கலிததொகை), கொற்றவை (பரிபாடல் 11) என பெயர் மாற்றம் பெற்றாள். தெய்வமான கொற்றவையே தந்து பகை முடிக்கும் கொடூரமான பேய்த்தனத்தால் அணங்கு உள்ளிட்ட பெயர்களில் அழைக்கப்பெற்றாள் என்பதும் சரியே.
ஏனெனில், கொற்றவையை கலையமர் செல்வி, அணங்கு, கொற்றவை, அமரி, குமரி, கவுரி, சூலி, நீலி, ஐயை, கண்ணுதல் பாகம் ஆளுடையாள், திங்கள் வாழ்சடையாள், திருவமாற் கிளையாள், பாய்கலைப் பாவை முதலான பெயர்களில் இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார். ‘நீலிக்குக் கண்ணீர் நெத்தியிலே’ என்பது இன்றளவும் சொல்லப்படும் பழமொழி. நெற்றியில் கண் கொண்டவள் கொற்றவை.
அணங்கு கொற்றவையாகி, கொற்றவை காளி, பேய்ச்சியாகி, பின்னர் நீலியாகவும் ஆகியிருக்க நிறைய வாய்ப்புள்ளது. இனி நீலியின் கதையை வெவ்வேறு நூலாசிரியர்கள் எப்படி கூறுகிறார்கள் என்று பார்க்கலாம்.













