தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள குகாட்பள்ளி வீட்டு வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ஹரிகாந்த் ரெட்டி. இவரது மனைவி மவுனிகா தனது உறவினரான லிகிதா என்ற பெண்ணுடன் அமீர்பேட் பகுதிக்கு மெட்ரோ ரெயிலில் சென்றார். லிகிதா தங்கி படிப்பதற்காக அங்குள்ள ஒரு விடுதியை பார்ப்பதற்காக இருவரும் சென்றிருந்தனர்.
அமீர்பேட் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு அவர்கள் இருவரும் வந்து சேர்ந்த போது மழை பெய்து கொண்டிருந்ததால், வெளியே செல்லாமல் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக ரெயில் நிலையத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி உடைந்து மவுனிகாவின் தலையில் விழுந்தது. தலையில் பலத்த காயமடைந்த மவுனிகா உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மவுனிகா பரிதாபமாக உயிரிழந்தார்.














