குலம் காக்கும் தெய்வங்கள் 7

0
1616

முன் வினை பின் விளையும் என்பதற்காகவோ, அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும் என்பதற்காகவோ அல்ல, உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவார்கள் என்பதற்காகவே உருவான காவியம் சிலப்பதிகாரம்.

பிறவா யாக்கையும் இறவா நிலையும் கொண்ட பெண் தெய்வங்களாக கொற்றவை போன்றோர் இருப்பினும், பிறந்து வாழ்ந்து மடிந்த பெண்களும் இருந்தனர். அவர்களை கன்னித் தெய்வம் என்றும், கற்புத் (பத்தினி) தெய்வம் என்றும் இரண்பாக பகுப்பர். கன்னித்தெய்வம் வேறு, கற்புத்தெய்வம் வேறு. கன்னித்தெய்வங்கள் பெரும்பாலும் இல்லுறை தெய்வங்களாகும். பத்தினித் தெய்வங்கள் ஊர் தெய்வமாகும். இத்தெய்வங்கள் கண்ணகி , பழகநல்லூர் நீலி போன்று சில வேளைகளில் தேசிய தெய்வங்களாகவும் ஆகலாம். மணமாகும் முன்பு இறந்த, நற்குணம் கொண்ட பெண்ணே கன்னித்தெய்வம். மணமானாலும் உறவு கொள்ளா நிலையில் இருந்தால் அவர்களை கன்னித்தெய்வமாக கருதலாம். மணமாகாவிட்டாலும் கற்பை காக்க போராடி இறந்தால் பத்தினித் தெய்வமாகலாம்.

சில குடும்பங்களில் கன்னிப்பெண் இறந்தால் அவளது ஆடைகளை, அணிகலனை வைத்து வழிபடுவார்கள். அவளை கன்னித் தெய்வம். கன்னிகா ஈஸ்வரி என்பர். நினைவு நாட்களில் கன்னிக்கு பிடித்த பொருட்களையும் விருப்பமான உணவையும் வைத்துப் படைத்து வணங்குவர். கன்னி ஆன்மா குளிர்ந்தால் வீட்டில் நல்லது நடக்கும் என்பது ஐதீகம். கன்னி மூலையே (வட கிழக்கு) இத்தெய்வத்துக்கான ஸ்தானம்.
.
தொடக்கத்தில் கற்பு என்பது ஆண், பெண் உறவு சார்ந்த ஒழுக்கமாக, பத்தினித்தனமாக கருதப்படவில்லை. தாய், தந்தையரால் ஒருவருக்கு மணமுடித்து கொடுக்கப்பட்டு வாழும் முறையே கற்பெனப்பட்டது. பின்னர் ‘கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை’ அதாவது வாக்கு தவறாமை என பொருள் கொள்ளப்பட்டது. இது ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானது. ஆரியர் கருத்து நிலைகொண்ட பின்னரே, அது பெண்ணுக்கு மட்டுமாய் விதிக்கப்பட்டு ‘எந்நிலையிலும் இணைபிரியாமல் ஒருவருடன் ஒன்றிவாழும் வாழ்க்கை’ என்றாக்கப்பட்டது.

அந்த பத்தினிக் கற்பையும் தலைக்கற்பு, இடைக்கற்பு, கடைக்கற்பு என்று மூன்றாக பிரிப்பார்கள். இதில் தலைக்கற்பு என்பது கணவன் இறந்த நிமிடமே அதிர்ச்சியில் இறப்பது. அப்படி இறந்தவர் கோப்பெருந்தேவி. மடிந்த கணவர் எரிந்த சிதையில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்வது இடைக்கற்பு. இதற்குச் சேரன் செங்குட்டுவனின் தாய் எடுத்துககாட்டு. கணவன் இறந்த பிறகு கைம்மை நோன்பு நோற்று, தலையை மொட்டையடித்து, நல்லுணவு, உடைகளை தவிர்த்து, அறைக்குள் ஒடுங்கி வாழும் வைதவ்யம் பூண்டு வாழ்வது கடைக்கற்பு. கோவலன் இறந்ததும் அப்படி துறவறம் பூண்டு வாழ்ந்தவர் மாதவி. இந்த மூன்று கற்பு நெறிகளில் எதிலும் அடங்காத மூர்க்கமான கற்பு கண்ணகியுடையது. கணவர் மடிந்ததற்கு நீதி கேட்டு அரசையும் நகரையும் அழித்துவிட்டு, சொந்த உடலுடன் சொர்க்கம் புகுந்தவர். அதனால் அவரை தமிழகம் மட்டுமின்றி, இலங்கை, இந்தோனேசியா வரை யாவரும் வழிபட்டனர். அதைபற்றி பின்வரும் அத்தியாயங்களில் விளக்கமாக பார்க்கலாம்.

கற்பு நெறிக் கடவுளுக்கு மற்றொரு எடுத்துக்காட்டு நீலி. இவள் இசக்கியம்மனாகவும் தென்னாட்டில் வழிபடபபடுபவள். இவளை யட்சி என்னும் சமண தெய்வமாக கொள்வர். ஆனால், நமது வழக்காற்றிலிருந்து சமணம் எடுத்ததா, சமணத்திலிருந்து நமது முன்னோர்கள் எடுத்தார்களா என்பது பெருங்கேள்விக்குறி.

இயற்கைக்கு மாறான இறப்பை அடைந்தவர்களே நமது பெண் தெய்வங்கள். அவர்கள் வஞ்சிக்கப்பட்டவர்களாகவும், தியாகம் புரிந்தவர்களாகவும் இருந்தனர். அறச்சீற்றத்தால் அச்சுறுத்திவந்த அவர்களை தெய்வங்களாக்கி சாந்தப்படுத்தினர் முன்னோர்கள்.
அப்படி ஒரு அசாத்தியமான தெய்வப் பெண்ணே இசக்கி. அவள் மனுஷியா, பேயா, யட்சியா, தெய்வமா என்ற வரையறுக்க முடியாதவள், ஆனால், அவளது கதை பழிவாங்கப்பட்ட பரிதாபகரமானது.

தென்மாவட்டத்தினர் வழிபாட்டில் இசக்கி சிறப்பிடம் பெறுகிறாள். அவளை நெல்லை மாவட்டம் பழவூரை சேர்ந்தவர் என்று கருதி அதன் அருகில் உள்ள முப்பந்தலை மூலமாக வைத்து ஒரு கதை கூறப்படுகிறது.

ஆனால், அது பழவூரல்ல, தொண்டை மண்டலத்தை சேர்ந்த பழகனூர் என்ற பழகைநல்லூர், அங்கிருந்த நீலியே இங்கு இசக்கியாக இலங்குகிறாள் என்பர். சமணர்களோ, அவள் ஒரு தெய்வாம்சம் பொருந்திய யட்சி என்பர். இந்த மூவரின் வரலாறும் ஒன்றுக்கொன்று இசைவாக இருப்பதால், கற்பின் கனலியான ஓர் இளம்பெண்ணை அவரவர் சூழலுக்கேற்ப வணங்கியுள்ளனர் என்று ஒரு முடிவுக்கு வரலாம். என்னினும், அதற்கு முன்பாக இவர்கள் தன்மை மனிதத்துக்கு புறம்பாக பேய், அணங்கு, சூரை போன்று இருப்பதால் அந்த தொடர்பை முதலில் உறுதிசெய்துகொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here