108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் கடந்த 1ஆம்தேதி முதல் அத்திவரதர் சயன நிலையில் (படுக்கை கோலத்தில்) பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். 30ஆவது நாளான நேற்று அத்திவரதர் முத்து கிரீடம், மலர் கிரீடம், ராமர் வண்ண பட்டாடையுடன் காட்சியளித்தார்.
3 கி.மீ. தூரம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அவரை தரிசித்தனர். தரிசன வரிசை நெரிசலில் சிக்கி 25 பேர் மயக்கம் அடைந்தனர். அவர்களுக்கு அங்குள்ள முகாம்களில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
பொது தரிசன வரிசையில் 9 மணி நேரமும் முக்கிய பிரமுகர்கள் பகுதியில் 5 மணி நேரமும் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
இதுவரை சயன கோலத்தில் (படுத்த நிலையில்) அருள்பாலித்து வரும் அத்திவரதர் நாளை முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தரிசன நேரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாளை அதிகாலை 5 மணிக்கு அத்திவரதரை நின்ற கோலத்தில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.