கரூர் வெங்கமேடு கணக்குப்பிள்ளை தெருவில் ரமேஷ் என்கிற பெயரில் செல்ல பிராணியாக நாய் ஒன்று வளர்ந்து வந்தது. நேற்று முன்தினம் மாலை தெருவில் சுற்றித்திரிந்த இந்த நாயை ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொன்றதாகவும், அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறி பொதுமக்கள் வெங்கமேடு மெயின்ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து வெங்கமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) குணசேகர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், நாய் வளர்ந்த அதே தெருவில் வசிப்பவரும், ஜவுளி தொழிலுக்கு துணி வடிவமைத்து கொடுக்கும் தொழில் செய்து வருபவருமான பாலசுப்பிரமணியன் (வயது 40) தன்னை கடிப்பதற்காக அந்த நாய் ஓடிவந்ததாக கூறி நகராட்சியில் புகார் கொடுத்ததாகவும், இதனால் கரூர் நகராட்சி பணியாளர் வேலுச்சாமி, அரசு காலனியை சேர்ந்த ரமேஷை நாயை சாகடிக்க ஏற்பாடு செய்துள்ளார். ரமேஷ் தான் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் தெருநாயை சுட்டு கொன்றுள்ளார்.
நாட்டு துப்பாக்கியை பயன்படுத்த வெங்கமேடு போலீஸ் நிலையத்தில் ரமேஷ் அனுமதி வாங்கியிருந்தார். எனினும் துப்பாக்கி பயன்படுத்துகிற உரிமத்தை தவறாக பயன்படுத்துதல், மிருகவதை தடை சட்டம் உள்பட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியன், ரமேசை போலீசார் கைது செய்தனர். நகராட்சி பணியாளர் வேலுச்சாமி மீது வழக்கு மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே துப்பாக்கியால் சுடப்பட்ட நாய் உடல் கொளாந்தானூர் கால்நடை மருத்துவமனையில் பிரதே பரிசோதனை செய்யப்பட்டு பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டது.குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைத்து பொதுமக்கள் அஞ்சலிக்காக தெருவில் வைக்கப்பட்டது. அப்போது, தாங்கள் வளர்த்த செல்ல பிராணியை பாசத்தை நினைத்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியது நெஞ்சை உருக்கும் விதமாக இருந்தது. தொடர்ந்து அந்த நாய் அடக்கம் செய்யப்பட்டது.










