ஜம்மு-காஷ்மீரில் மனித உரிமை நிலைமை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் பாகிஸ்தான் ஒரு “கூட்டு அறிக்கையை” சமர்ப்பித்துள்ளது, இதில் சுமார் 60 நாடுகள் ஆதரிப்பதாக கூறி உள்ளது. ஆனால் ஆதரிக்கும் நாடுகளை அடையாளம் காட்டவில்லை.
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் 47 நாடுகள் மட்டுமே உறுப்பினர்களாக உள்ள நிலையில், ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்ததை எதிர்க்கும் தங்கள் நாட்டின் நிலைப்பாட்டை அந்த அமைப்பிலுள்ள 60 நாடுகள் ஆதரித்ததாக விவரம் அறியாமல் குறிப்பிட்டதன் மூலம் பாகிஸ்தான் கேலி, கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.
இதுகுறித்து ட்விட்டரில் இம்ரான்கான் வெளியிட்டுள்ள பதிவுகளில், ‘ஜம்மு-காஷ்மீரில் இந்தியா முற்றுகை மற்றும் கட்டுப்பாடுகளை விலக்க வேண்டும், காஷ்மீர் மக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும், பாதுகாக்கப்பட வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கைகளுக்கு ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் 58 நாடுகள் ஆதரவு தெரிவித்தன’ என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் அளித்துள்ள பதிலில், ‘ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 47 நாடுகள்தான் உறுப்பினர்களாக இருப்பதாகவும், ஆனால் பாகிஸ்தானோ 60 நாடுகள் ஆதரவு தெரிவித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது. ஆதரவு தெரிவித்த நாடுகளின் பெயர்களை அந்நாடு வெளியிட வேண்டும்’ என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இம்ரான் கானின் பதிவை டுவிட்டரில் உள்ள பல்வேறு தரப்பினரும் கடுமையாக விமர்சித்து கிண்டல் செய்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.













