ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்ததும் பொதுமக்களுக்கு ஜனரஞ்சகமாகவும், எதிர்கட்சிக்கு பகை ரஞ்சகமாகவும் காட்சியளித்தார். குறிப்பாக தெலுங்கு தேசம் சந்திரபாபு நாயுடுவின் ஆற்றங்கரை மாளிகையை இடிக்கச்சொன்னது பரபரப்பானது.
இதற்கிடையே தும்கூர் மாவட்டத்தில் இரு கட்சியினருக்குமிடையே தகராறு மூண்டது. ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசார் பொனுகுபாடு பகுதியில் சாலைக்கு நடுவே சுவரே எழுப்பிவிட்டனர்.
இரு தரப்பிலும் பேரிடர் காலத்தில் அடைக்கலம் தேடி வேறிடம் செல்வதுபோல், சண்டையால் தொண்டர்கள் கட்சி அலுவலகங்களில் தங்க நேரிட்டது.
இதனால், குண்டூரிலிருந்து அத்மகூர் வரை ‘சலோ அத்மகூர்’ பேரணி நடத்த சந்திரபாபு நாயுடு திட்டமிட்டார். ஜெகன் மோகனும் ‘ சலோ அத்மகூர்’ என முழக்கமிட்டு ஊர்வலம் செல்ல தயாரானார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டிலிருந்து சலோ அத்மகூர் பேரணிக்கு புறப்பட்ட சந்திரபாபு நாயுடு வை, கேட்டை இழுத்து மூடி போலீசார் வீட்டுச்சிறை வைத்தனர். அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டும் கதவை திறந்துவிடவில்லை.
அவரது மகன் மற்றும் கட்சி எம்பிக்கள் எம்எல்ஏக்கள் முக்கிய தலைவர்களும் சிறை வைக்கப்பட்டனர்.
எனது 40 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் இதுபோன்ற சனநாயக விரோத நடவடிக்கையை பார்த்ததில்லை என்கிறார் சந்திரபாபு நாயுடு.













