நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே பாஸ்போர்ட் அலுவலகம் எதிரே அமைந்துள்ளது கசாலி உணவகம். இந்த உணவகத்தில் காலை 10முதல் இரவு 11 மணி வரை விற்பனை நடைபெறும். இந்நிலையில் நேற்று நெல்லை கரையிருப்பு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் , அவரது நண்பர் செந்தில் பெருமாள் இருவரும் இந்த உணவகத்தில் சாப்பிட்டுள்ளனர்.
புரோட்டா மற்றும் குவாட்டர் தந்தூரி சிக்கன் ஆர்டர் செய்த அவர்கள் தந்தூரி சிக்கனுக்கு மைனஸ் கேட்டுள்ளனர். அதற்கு கடை ஊழியர்கள் குவாட்டர் தந்தூரி சிக்கனுக்கு மைனஸ் கிடையாது, ஆப் அல்லது ஃபுல் தந்தூரி சிக்கனுக்கு மட்டுமே கொடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் கடை ஊழியர்களுக்கும் சாப்பிட வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சாப்பிட வந்த இருவரும் உணவக உரிமையாளர் கரிமிடம் இது குறித்து புகார் தெரிவித்துள்ளனர். அவர் அது குறித்து கண்டு கொள்ளாததால் கரிமை தாக்கியுள்ளனர்.
இந்த நிலையில் கடை ஊழியர்கள் சாப்பிட வந்த இருவரையும் கட்டை மற்றும் கம்பால் தாக்கியுள்ளனர். படுகாயம் அடைந்த நிலையில் அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மேலப்பாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், சாப்பிட வந்த ஒருவர் எடுத்த தாக்குதல் வீடியோ இணையதளத்தில் வைரலானது. உணவகம் சார்பிலும் தாக்குதலுக்குள்ளான நபர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இரு தரப்பு புகாரையும் பெற்றுக் கொண்ட போலீசார் 7 பேரை கைது செய்துள்ளனர்.