தமிழகத்தில் நாங்குநேரி விக்கிரவாண்டி ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தல் ஏற்படுத்தியுள்ள பரபரப்புகளிலேயே விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் பரப்புரையின் போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய பேச்சு தான் மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் கடந்த 1991ஆம் வருடம் தமிழகத்திற்கு வந்த போது ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் பலியானார். அவரது படுகொலைக்கு காரணம் விடுதலைப் புலிகளின் தற்கொலை படையினர் என கூறப்பட்டது. ஆனாலும், விடுதலைப்புலிகள் அதை உடனடியாக மறுத்தனர்.
ராஜீவ் கொலைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எந்த தொடர்புமில்லை என்று விடுதலைப்புலிகளின் அயலக செய்தித் தொடர்பாளர் தளபதி கிட்டு அறிக்கை வெளியிட்டதோடு, இது தொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் உறுதியளித்தார். மேலும், தமீழீழ புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் 2002ம் ஆண்டு நடத்திய சர்வதேச பத்திரிகையாளர் சந்திப்பில் ராஜிவ் காந்தி கொலை ஒரு துன்பியல் சம்பவம் என்று வருத்தம் தெரிவித்தார்.
ஆனால், இவ்வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 26 பேரில் பெரும்பாலானோர் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. அதற்கானஆதாரங்களை வழங்காவிட்டாலும், செய்திக்குறிப்பு யாவற்றிலும் அவ்வாறே வெளியிடப்பட்டது.
கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டோரில் எழுவர் மரண தண்டனை பெற்று, அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு, 27 ஆண்டுகளுக்கு மேலாக விடுதலை கிடைக்காமல் இன்னமும் சிறையில் உள்ளனர்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ‘நாங்கள் தான் எங்கள் தமிழ் மண்ணில் ராஜிவ் காந்தியை கொன்று புதைத்தோம்’ என்று தேர்தல் பிரச்சாரத்துக்கிடையே பேசி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தமிழர் விடுதலைக் கொற்றத்தின் தலைவர் வியனரசு கூறுகையில், ‘ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன், அயலக உறவு செய்தி தொடர்பாளர் தளபதி கிட்டு ஆகியோர் ராஜிவ் கொலை வழக்கில் தொடர்புடையவர்களுக்கும் எங்கள் இயக்கத்துக்கும் எந்த தொடர்புமில்லை என்று அப்போதே மறுத்துள்ளனர். இப்போது திடீரென சீமான் இப்படி பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. இது ஏழு தமிழரின் விடுதலைக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தும்’ என்றார்.
நாம் தமிழர் கட்சி தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் வக்கீல் சிவகுமார் கூறுகையில், ‘ நாங்கள் என்பதை சம்பந்தமே இல்லாமல் விடுதலை புலிகள் என வலிந்து பொருத்தக்கூடாது. நாங்கள் என்பது தமிழர்கள் என்னும் பொருளில் சொல்லப்பட்ட வார்த்தை. அதுவும், அமைதிப்படை சென்று அங்கு ஆயிரக்கணக்கானோரை கொன்று, பாலியல் வன்புணர்வு செய்த கொடுமையின் விளைவை உணர்த்தும் வகையில் கூறப்பட்டது.
பாதிக்கப்பட்ட தமிழர்கள் பழிவாங்கினர் என்பது உறுதியான நிலையில், அந்த தமிழர்கள் என்ற பதம் எங்களையும் குறிக்கும் அல்லவா? இதற்கும் ஏழு தமிழர் விடுதலைக்கும் முடிச்சு போடவேண்டியதில்லை. சிறையில் வாடும் தோழர்களை அந்த நாங்கள் என்ற வார்த்தை குறிக்காது’ என்றார்.
இது இவ்வாறிருக்க, சீமானுக்கு பதில் சொல்லும் விதத்தில் அவரை சாடி காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி வெளியிட்ட அறிக்கையில், விடுதலை புலிகளையும், அவர்கள் இயக்கத்தையும் இழிவுபடுத்தும் வகையில் பேசியது தமிழர் இயக்கத்தினரை ஆத்திரத்துக்குள்ளாக்கியுள்ளது.
ராஜீவ் கொலை தொடர்பான விசாரணை நடந்தபோதே சுப்பிரமணியசுவாமி, திருச்சி வேலுச்சாமி ஆகியோர் கொலையில் சர்வதேச சதி இருப்பதாக கூறியும் அந்த கோணத்தில் விசாரிக்க காங்கிரஸ் ஆட்சியாளர்களே முன்வரவில்லை.
கொலை தொடர்பாக அமைக்கப்பட்ட ஜெயின் கமிஷன் சந்திராசாமிலை விசாரிக்க உத்தரவிட்டும் விசாரிக்கவில்லை. ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட நாளில் சாமியார் சந்திராசாமி எங்கே இருந்தார், அவர் யார் யாரைத் தொடர்பு கொண்டு பேசினார் என்ற தகவல்கள் அடங்கிய ஆவணங்கள் தொலைந்து போனதாக கூறப்பட்டது. அதே போன்று வயர்லெஸ் போனில் அவர் அன்றைய தினம் யார் யாரிடம் தொடர்பு கொண்டு தகவல் பரிமாற்றம் செய்தார் என்ற விவரங்களும் இல்லை என்று ஜெயின் கமிஷன் குற்றஞ்சாட்டியது.
1991 ஜுலை மாதம் அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் எஸ்.பி. சவான், எல்.டி.டி.ஈ.யைத் தவிர வேறு சில சர்வதே நிறுவனங்களுக்கு கொலையில் தொடர்பிருக்கலாம் என்றும் கூறினார்.
மரகதம் சந்திரசேகர் பேரன் லலித் சந்திரசேகர் மனைவி வினோதினியுடன் வந்திருந்தார். வினோதினியின் அப்பா ஜீனியஸ் ஜெயவர்த்தனே. சிவராசனின் அம்மா சிங்களவர். வக்கீல் சந்திரசேகர், ‘ வினோதினியின் பூர்வீகத்தை விசாரித்தாலே உண்மை புலப்படும்’ என்றார். ஆனால் விசாரிக்கப்படவில்லை. 
ஆனால், விடுதலை புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் என்று உறுதிப்படுத்தப்படாத ஈழத்தமிழர்களையும், விடயமே தெரியாமல் பேட்டரி வாங்கிக்கொடுத்தவரையும் கைதுசெய்துவிட்டு, அந்தப்பழியை விடுதலை புலிகள் இயக்கத்தின் மீது போட்டு, அதன் போராட்ட நடவடிக்கையை முடக்க வழிசெய்தார்கள். வீண் பழி சுமக்கச்செய்தார்கள். விடுதலைப்புலிகள் தங்களின் நடவடிக்கையை என்றுமே மறைத்ததில்லை என்பது உலகுக்கே தெரியும்.
இது இவ்வாறிருக்க, சீமான் பேசியதற்கு அவருக்கு பதில் சொல்லாத கேஎஸ் அழகிரி, விடுதலை புலிகள் இயக்கத் தலைவர்களை வசை பாடுவதையும், கொலைகாரர்களான எழுவர் விடுதலையை கோருவது தவறு என்று பேட்டியளிப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விவாதம் காங்கிரசுக்கு தமிழகத்தில் மேலும் பின்னடைவை ஏற்படுத்தும்’ என்றார்.
எவ்வாறாயினும், இந்த சமயத்தில் சீமான் கொளுத்திப்போட்ட நெருப்பால், ஏழு தமிழர் விடுதலை மட்டுமல்ல, ஈழத்தமிழர் விடுதலை இயக்கத்துக்கான தடை நீக்கம் பற்றி சர்வதேச அளவில் நடக்கும் விவாதத்துக்கும் இது பாதிப்பை உருவாக்கும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
_ சிறப்பு செய்தியாளர் க. அலெக்ஸ்











