தூத்துக்குடி மாவட்டம்
விளாத்திகுளத்தில் அமைந்துள்ள 400 ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் திருக்கல்யாண உற்சவம் மிகவும் கோலாகலமாகவும், பக்திப் பரவசத்துடனும் நடைபெற்றது.
திருக்கல்யாணம் விழாவை முன்னிட்டு அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு, சுவாமி மற்றும் அம்பாளுக்குச் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, வண்ண மலர்களாலும், பட்டு வஸ்திரங்களாலும் அலங்கரிக்கப்பட்ட மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் எழுந்தருளினர்.

மந்திரங்கள் முழங்க, மங்கல வாத்தியங்கள் இசைக்க, சுப்பிரமணியன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாண சிறப்பாக நடைபெற்றது.அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் “ஹர ஹர மகாதேவா, தென்னாடுடைய சிவனே போற்றி” எனப் பக்தி முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர். சுமங்கலிப் பெண்கள் தங்களது மாங்கல்ய பாக்கியம் நிலைக்க வேண்டி புதிய மஞ்சள் கயிறு கட்டிக்கொண்டனர்.

விழாவில் விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டனர். திருக்கல்யாணத்தை முன்னிட்டு கோவில் நிர்வாகம் மற்றும் உபயதாரர்கள் சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் விழாக் குழுவினர் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.













