ஒரு மாதமாக குடிநீர் இல்லை – ஒரு குடம் ரூ.10-க்கு வாங்கும் அவலம்! எட்டையாபுரம் அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்ட பொதுமக்கள்
தூத்துக்குடி மாவட்டம், எட்டையாபுரம் அருகே உள்ள கீழஈரால் கிராமத்தில் ஆர்.சி. தெரு பகுதியில் சாலைப் பணிகளுக்காக தெருவில் இருந்த குடிநீர்த் தேக்கத் தொட்டி அகற்றப்பட்டது. எவ்வித மாற்று ஏற்பாடும் செய்யாமல் குடிநீர்த் தேக்கத் தொட்டி அகற்றப்பட்டதால், கடந்த ஒரு மாத காலமாக அப்பகுதி பொதுமக்களுக்குக் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஒரு குடம் குடிநீரை ரூ.10-க்கு விலைக்கு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் எடுத்துக் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் காலிக் குடங்களுடன் கீழஈரால் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் ஊராட்சி மன்றச் செயலாளர் சிவபாலன் பேச்சுவார்த்தை நடத்தினார். விரைவில் வட்டார வளர்ச்சி அலுவலர் மூலமாகக் குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று அவர் உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டனர்.














