பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தி தர வேண்டும் என்று எம் எல் ஏ வானதி சீனிவாசன் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த மே 7 ஆம் தேதி தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், ஆவின் பால் விற்பனை விலை லிட்டருக்கு ரூ. 3 குறைக்கப்படும் என்று அறிவித்தார். இது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இதனை பா.ஜ.க சார்பில் வரவேற்றோம். ஆனால், தமிழக அரசின் இந்த முடிவு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.
ஆவின் பால் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ. 3 குறைத்த தமிழக அரசு, கொள்முதல் விலையை அதே அளவுக்கு அதாவது லிட்டருக்கு ரூ. 3 அதிகரித்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாததால் பால் உற்பத்தியாளர்களான கறவை மாடுகள் வளர்ப்போர்
கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆவின் பால் விற்பனை விலை குறைக்கப்பட்டதும், தனியார் பால் நிறுவனங்களும் விலையைக் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. விற்பனை விலை குறைந்ததால் தனியார் பால் நிறுவனங்கள் கொள்முதல் விலையையும் ஓசையின்றி குறைத்துவிட்டன. அதிகாரப்பூர்வமாக இந்த விலை குறைப்பு அறிவிக்கப் படாவிட்டாலும் மாடு வளர்ப்போருக்கு முந்தைய விலை கிடைப்பதில்லை.
எனவே, கிராமங்களில் மாடுகள் வளர்த்து அதனை மட்டுமே நம்பி வாழ்க்கையை நடத்தி வரும் அடித்தட்டு மக்களின் நலன் கருதி பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 3 அதிகரிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.











