சிங்கம்புணரி வட்டம், எஸ்.புதூர் ஒன்றியம், கோட்டைநெடுவயல் கிராமத்தில் உள்ள தட்டான் கண்மாயில் கடந்த சில நாட்களாக அப்பகுதி கிராம மக்களை அச்சுறுத்தும் வகையில் அந்தப் பகுதியில் இதுவரை இல்லாத புதிய வகை விலங்கு ஒன்று நடமாடித் திரிந்துள்ளது.

ஆற்று நீர் நாய் என்று கண்டறியப்பட்ட அபூர்வமான இந்த விலங்கினை பார்த்த பொதுமக்கள் அச்சமடைந்தனர். நேற்று அந்த கிராம மக்கள், இளைஞர்கள் சிலர் உதவியுடன் பாசனக் கண்மாயான தட்டான் கண்மாயில் பொதுமக்களையும், விவசாயிகளையும் அச்சுறுத்தி வந்த அபூர்வ விலங்கான ஆற்று நீர் நாயினை கயிறுகளை தூக்கி வீசி, சுமார் இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் லாவகமாகப் பிடித்தனர்.

உடனடியாக, வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதில், விரைந்து வந்த வனத்துறை அலுவலர் பிரகாஷ் தலைமையிலான வனத்துறையினர் வசம் கிராம மக்கள் ஆற்று நீர்நாயினை பத்திரமாக ஒப்படைத்தனர். இன்னும் ஒரு ஆற்று நீர்நாய் பிடிபடாமல் உள்ளதாகவும் கூறப்படுகிறது.












