தூத்துக்குடி மாவட்டத்தின் வட பகுதியில் கடந்த ஆவணி இறுதியில் மானாவாரி நிலத்தில் பயிரிட்ட உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம், வெங்காயம், மிளகாய் போன்ற பல்வேறு பயிர்கள் சரியான மழை இல்லாமல் வாடின. சில இடங்களில் விதைத்தது முளைக்காமல் விவசாயிகள் வேதனை அடைந்தனர். இதனை தொடர்ந்து 15 நாட்களுக்கு முன் மீண்டும் விதைத்தனர். அதன் பின்னரும் மழை பெய்யவில்லை.
மூன்று முறை விதைப்பு செய்தும் முத்துலாபுரம் குறுவட்டத்தில் உள்ள கருப்பூர், அயன்வடமலாபுரம், தாப்பாத்தி, கோட்டூர், மாசார்பட்டி, மாவில்பட்டி போன்ற பல்வேறு கிராமங்களில் மழை பெய்யவில்லை. மழை போக்கு காட்டுவதால் விவசாயிகள் மழைக்கஞ்சி, பொங்கல் வழிபாடு, கிராம எல்லையில் ஆடு பலியிடுதல், கொடும்பாவி எரித்தல் போன்ற நூதன வழிபாடுகளை செய்து வருகின்றனர்.
இன்று எட்டையபுரம் அருகே மாவில்பட்டி கிராமத்தில் மழை வேண்டி கொடும்பாவியை தெருக்களில் இழுத்து, ’பயிர்கள் முளைக்கவில்லையே, வாங்கிய கடனை எப்படி அடைப்பது, குடும்பத்தை எவ்வாறு காப்பாற்றுவது?’ என்று ஒப்பாரிவைத்து கிராம முச்சந்தியில் தீ வைத்து கொளுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் ஊாராட்சி தலைவர் எல்லப்பன், கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தலைவர் வரதராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.








