“ப்ளீஸ் சார்… ஃபைன் கட்டிவிடுகிறேன்… பைக்கைக் கொடுத்துவிடுங்கள் சார்… அம்மாவுக்குத் தெரிந்தால் திட்டுவாங்க!” – பசுவந்தனையில் ஒரே பைக்கில் ஹாயாகச் சுற்றித்திரிந்த 4 சிறுவர்களுக்கு அறிவுரை கூறி ஆட்டோவில் வீட்டுக்கு அனுப்பி வைத்த போலீசார்
தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனையில் காவல் உதவி ஆய்வாளர் முருகேசன் நேற்று மாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது நான்கு சிறுவர்கள் ஒரே பைக்கில் ஹாயாகச் சுற்றி வந்துள்ளனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய போலீசார், பைக்கைப் பறிமுதல் செய்ததுடன், சிறுவர்கள் இருசக்கர வாகனங்களை இயக்குவது விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்றும், உரிய வயதை அடைந்து ஓட்டுநர் உரிமம் பெற்ற பின்னரே வாகனங்களை இயக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினர்.
அப்போது சிறுவர்களில் ஒருவர், “ப்ளீஸ் சார்… பைக்கைக் கொடுத்துவிடுங்கள். நான் வேண்டுமானால் ஃபைன் கட்டிவிடுகிறேன்” என்று கூறியுள்ளார்.
அதற்கு போலீசார், “டேய், உனக்கு லைசென்ஸ் கிடையாதுடா… பிறகு எப்படி ஃபைன் கட்டுவ? உங்கள் வீட்டு போன் நம்பரைக் கொடு. நாங்கள் பெரியவர்களை வரச் சொல்லி பைக்கைக் கொடுத்து விடுகிறோம்” என்று கூறியுள்ளனர்.
இதற்குச் சிறுவன், “சார்… அம்மாவுக்குத் தெரிந்தால் திட்டுவாங்க சார்” என்று கூறியுள்ளான்.
இதையடுத்து, “வீட்டுக்குத் தெரியாமல் பைக்கை எடுத்து வருவது தவறு இல்லையா? மது குடித்துவிட்டு நிறைய பேர் வாகனங்களை ஓட்டி வருகிறார்கள். விபத்து ஏற்பட்டால் என்னடா செய்ய முடியும்?” என்று போலீசார் சிறுவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
தொடர்ந்து, சிறுவர்களைப் பற்றிய விவரங்களைச் சேகரித்து, அவர்களது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர் நான்கு சிறுவர்களையும் ஆட்டோவில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது, “வீட்டுக்குப் பத்திரமாகப் போங்கள். உங்கள் பெரியவர்களிடம் பைக்கைக் கொடுத்து விடுகிறோம். இனிமேல் இதுபோன்று செய்யக்கூடாது” என்று அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.
.












