பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் பழமையான குடியிருப்பு பகுதி. இதன் அருகே உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு நெடுஞ்சாலைக்கும் சில முக்கிய வழிபாட்டுத் தலங்களுக்கும் அருகே உள்ளது. இந்த குடியிருப்பு பகுதியில் 10836 என்ற எண்ணுள்ள டாஸ்மாக் கடையை அரசு இயக்கி வருகிறது. குடிமக்களின் சிறப்பு வசதியாக அங்குள்ள வீட்டுக்குள்ளேயே பார் நடக்கிறது. குடியும் குடித்தனமுமாக ‘குடிமக்கள்’ இருக்கும் அந்தப் பகுதியில் பிற மக்கள் நடமாடவே முடியாதவாறு மிகுந்த இடர்பாடாக உள்ளது.

நெடுஞ்சாலை மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே, அதுவும் குடியிருப்புக்கு நடுவே, ஏதோ கோயிலை அமைத்தது போல் டாஸ்மாக்கை அமைத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை முறையிட்டும் அரசும் டாஸ்மாக் நிர்வாகமும் சிறிதும் அக்கறை காட்டவில்லை. மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சி நிர்வாகமும் தலையிடத் தயாராக இல்லை.

இந்நிலை தொடர்ந்து நீடித்தால் அப்பகுதியில் வசிக்கும் நூற்றுக்கணக்கான மக்கள் கடுமையான போராட்டத்திற்கு தயாராக உள்ளனர். எனவே, இனியாவது அதிகாரிகள் நிலைமையை உணர்ந்து அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று பெண்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.













