குடிநீர் வழங்க வலியுறுத்தி விளாத்திகுளம் யூனியன் அலுவலகம் முன்பு பூசனூர் கிராம மக்கள் போராட்டம் நடத்தினார்.
விளாத்திகுளத்தில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் பூசனூர் கிராமம் உள்ளது. இப்பகுதி பொதுமக்களுக்கு விளாத்திகுளம் வைப்பாற்றுப் பகுதியில் போர் அமைத்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், குடிநீர் முறையாக வழங்கவில்லை என்பதை வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் விளாத்திகுளம் யூனியன் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
பூசனூர் கிராமத்திற்கு மொத்தம் 5 குடிநீர் டேங்குகள் உள்ளன . அதில் 4 டேங்குகளில் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிக்கு மட்டும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது எனக் குற்றம் சாட்டினர்.
அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.








