வேலூர் தொரப்பாடி காந்தி தெருவை சேர்ந்தவர் நவ்சாத், இவருக்கு இரண்டு பெண், இரண்டு ஆண் என 4 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவரது மூத்த மகள் நசியா(17) உட்பட 4 குழந்தைகளும் நேற்று சித்தேரி பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் விளையாட சென்றுள்ளனர். அப்போது நசியா மற்றும் அவரது சகோதரர்கள் நீரில் இறங்கி குளித்ததாக கூறப்படுகிறது.
நீச்சல் தெரியாத காரணத்தால் நசியா நீரில் மூழ்கியுள்ளார். இதை பார்த்த சகோதர, சகோதரிகள் கூச்சலிடவே அப்பகுதியினர் ஓடிவந்து மீட்க முயன்றனர். முடியாத நிலையில் அரியூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த அரியூர் காவல் துறையினர் வேலூர் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் நீரில் மூழ்கிய நசியாவை தேடிவந்தனர். நேற்று இருட்டும் வரை நசியாவின் உடல் கிடைக்காததால் இன்று இரண்டாவது நாளாக அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடம் மீட்பு படையினரின் உதவியுடன் காலை 8 மணி முதல் தேடிய நிலையில் 2 மணி நேரம் கழித்து மாணவி நசியாவின் உடல் மீட்கப்பட்டது. தொடர்ந்தே உடற்கூராய்விற்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக அரியூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.















