சென்னையில் பெருநகர மாநகர போக்குவரத்து கழகத்தின் மூலமும், சென்னை தவிர மற்ற பகுதிகளில் அரசு போக்குவரத்து கழகங்களின் மூலமும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
நிதி நெருக்கடியில் இருந்து மீட்கவும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்ற பல்வேறு காரணங்களையும் கருத்தில் கொண்டு மின்சார பஸ்களை இயக்க அரசு முடிவு செய்தது.
மின்சார பஸ்களின் விலை அதிகம் என்ற போதிலும், செலவு மிகவும் குறைவு சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுப்பதை கருத்தில் கொண்டு போக்குவரத்து கழக மறு கட்டமைப்பின் மூலம் நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ் 2 ஆயிரம் மின்சார பஸ்களையும், 12 ஆயிரம் பி.எஸ்.-4 வகை பஸ்களையும் வாங்குவதற்கு அரசு முடிவெடுத்தது.
முதற் கட்டமாக 100 மின்சார பஸ்கள் ஜெர்மனி நாட்டின் கே.எப்.டபிள்யூ நிறுவனத்தின் நிதி உதவியுடன் வாங்கப்பட உள்ளது. சோதனை ஓட்ட முறையில் 2 பஸ்களை சென்னையில் இயக்க முடிவு செய்ததை தொடர்ந்து, மின்சார பஸ்களில் ஒரு பஸ்சை அசோக் லேலண்ட் நிறுவனம் வடிவமைத்து தயாரித்து சென்னையில் இன்று(திங்கட்கிழமை) சோதனை அடிப்படையில் இயக்கப்பட உள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடக்கும் விழாவில் இந்த புதிய பஸ்சை தொடங்கி வைக்கிறார்.இந்த மின்சார பஸ்களை 4 மணி நேரம் சார்ஜ் செய்தால் 320 கிலோ மீட்டர் தூரம் வரை இயக்கலாம்
, 54 பயணிகள் பயணம் செய்யும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், குளிர்சாதன வசதியுடன் கண்காணிப்பு கேமராவும் பஸ்சில் பொருத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.














