திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சாதிய மோதல், பெண் வன்கொடுமை, ஆணவக் கொலை போன்றவை நடப்பதற்கு பள்ளி, கல்லூரி பருவத்தில் பெற்றோராலும் ஆசிரியராலும் மாணவர்கள் சீர்திருத்தப்படாததே பெரும் காரணமாக உள்ளது.
சமூக அக்கறையற்ற ஆசிரியர்கள் மாணவர்களிடையே அடிப்படையாக எழும் சாதிய, பாலியல் சீண்டல்களை முளையிலேயே கிள்ளி எறிவது இல்லை. அசட்டை செய்வதோடு அதனை மூடி மறைக்கவே முயல்கின்றனர். இதனால், வம்பு செய்யும் மாணவர்கள் குட்டி தாதாவாக, சமூக விரோதியாக எளிதில் உருமாறுகின்றனர்
திருநெல்வேலியில் தொடர்ந்து பள்ளிகளில் அப்பாவி மாணவ மாணவிகள் பாதிக்கப்படுவது நிகழ்கிறது. அப்படித்தான் நாங்குநேரி சின்னதுரையும் தாக்குதலுக்கு ஆளானார். தற்போது அப்பகுதியில் நடந்துள்ள சம்பவம் ஒன்று மிகுந்த மன உளைச்சலை தருவதாக உள்ளது.
ராதாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவி முன்பு அதே வகுப்பு பயிலும் மாணவர் ஒருவர் பேண்ட் ஜிப்பை அவிழ்த்து ஆபாச செய்கை செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியுற்ற அந்தச் சிறுமி வகுப்பு ஆசிரியரிடம் கூற, அவர் தலைமை ஆசிரியரை கைகாட்ட, அவரோ’ நடந்ததை வெளியே சொல்லக்கூடாது’ என்று மிரட்டியுள்ளார். காரணம் அந்த ஆபாச மாணவர் அங்குள்ள ஆசிரியர் ஒருவரின் உறவினர்.
தலைமை ஆசிரியரும் கேட்க மறுத்த நிலையில், அதே பள்ளியில் பயிலும் சிறுமியின் சகோதரன் ஆபாச மாணவரை தட்டிக் கேட்டுள்ளார். மாணவி குற்றச்சாட்டுக்கு நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியை, உடனே காவல்துறை வரை தகவலை கொண்டு சென்றுள்ளார்.
பெரும்பாலும் பள்ளி வளாகத்திற்குள் விசாரிக்க வரும் காவல்துறை அதிகாரிகள் சீருடை இன்றி வந்து நிதானமாக விசாரிப்பது முறை. ஆனால், பள்ளிக்கு சீருடையில் மிடுக்காக வந்த பெண் காவல் அலுவலர், சிறுமியின் அண்ணனை அங்கேயே தாக்கியதோடு, சிறுமியையும் வயிற்றில் கிள்ளி எச்சரித்து இருக்கிறார்.
இதையடுத்து சிறுமி தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் வேதனையுடன் காத்திருப்பதாக மாணவியின் உறவினர்கள் கூறினர்.
ஏற்கனவே நாங்குநேரி அரசு பள்ளியை தொடர்ந்து கடந்த ஆண்டு வள்ளியூர் அரசு பள்ளியில் சாதிய பிரச்சனை ஏற்பட்டது. அதன் அருகில் இப்போது பாலியல் அருவருப்பு அரங்கேறியுள்ளது. தலைமை ஆசிரியரே தன்மையாக இரு சிறார்களிடமும் விசாரித்து கண்டித்து இருந்தாலோ, பள்ளியின் உள்ளக விசாரணை குழு மூலம் தீர்வு கண்டிருந்தாலோ காவல்துறை வரை பிரச்சனை செல்லத் தேவையில்லை.
இனியாவது பாதிக்கப்பட்ட மாணவிக்கு நியாயம் வழங்கி, சண்டையிட்ட மாணவர்களை எச்சரித்து, மூவருக்கும் மனநல ஆலோசனை நல்கி பிரச்சனையை பெரிதாகாதவாறு தீர்த்து வைக்க வேண்டும். விவகாரம் ஊர் பிரச்சினையாக மாறும் சூழ்நிலை இருப்பதாலேயே இத்தகைய செய்தி வெளியிட அவசியமாயிற்று.














