மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சாரப் பயணத்துக்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி மாவட்டத்துக்கு வந்தார். அவருக்கு தூத்துக்குடி மாவட்ட எல்லையில் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ. தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இரவு 10.15 மணிக்கு விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு அவர் கோவில்பட்டிக்கு வந்தார். தொடர்ந்து நேற்று காலை அருள்தரும் செண்பகவல்லி அம்மன் கோயிலில் தரிசனம், தீப்பெட்டி, கடலை மிட்டாய் உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசினார்.
பின்னர் மாலை 5.30 மணிக்கு கோவில்பட்டி பிரதான சாலையில் தீயணைப்பு நிலையம் அருகே இருந்து பயணியர் விடுதி முன்பு வரை ‘ரோடு ஷோவில் பங்கேற்றவர், சாலையோரம் நின்ற மக்களையும், கட்சிக்காரர்களை பார்த்து வணங்கினார். தொடர்ந்து பயணியர் விடுதி முன்பு பிரச்சாரக் கூட்டம் நடந்தது. அதில் அவர் பேசியதாவது:
எங்கள் கூட்டணி பார்த்து ஸ்டாலின் பதறுகிறார். ஆட்சி பறிபோய்விடும் என்ற பயத்தில் உள்ளார். திமுக நல்லது செய்த சரித்திரம் கிடையாது. கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன் தான்.

நாங்கள் எப்போது பாஜகவுடன் கூட்டணி வைத்தோமோ அப்போதே திமுக வீழ்ச்சியடைந்துவிட்டது. பாஜக மதவாத கட்சி என அவதூறு ஸ்டாலின் பரப்புகிறார். 1999-ல் பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்து வெற்றி பெற்றது. அந்த அமைச்சரவையில் திமுகவைச் சேர்ந்த முரசொலி மாறன் அமைச்சராக இருந்தார். அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும் பராவயில்லை என இலாகா இல்லாத அமைச்சராக வைத்து அழகுபார்த்த கட்சி பாஜக. முரசொலி மாறன் மறைந்தவுடன் அவரது இறுதி ஊர்வலத்தில் அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் பங்கேற்றார். அடுத்த 15 நாட்களில் காங்கிரசுடன் கூட்டணி வைத்து, அந்த அமைச்சரவையில் திமுக இடம் வாங்கிக் கொண்டது. பச்சோந்தி கூட கொஞ்சம் நேரம் கழித்து தான் நிறம் மாறும். ஆனால், திமுக உடனடியாக நிறம் மாறிவிடும். திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தபோது, மதவாத கட்சியாக இல்லை. அதிமுக பாஜகவுடன் சேர்ந்தால் அவதூறு பரப்பி அரசியல் லாபம் தேடுகின்றனர்.
ஒவ்வொரு கட்சிக்கு ஒரு கொள்கை உள்ளது. ஆனால், திமுகவுக்கு கொள்கையே கிடையாது. அவர்களது கூட்டணியில் உள்ள கட்சியினருக்கும் கொள்கை கிடையாது. ஒத்த கொள்கையுடன் உள்ளோம் என அவர்கள் கூறுகின்றனர். அப்புறம் எதற்கு தனித்தனி கட்சி. திமுகவுடன் இணைந்துவிடவேண்டியது தானே?
தமிழகத்தில் ஒட்டுமொத்தம் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. ஒரு காலத்தில் ஸகாட்லாந்து இணையான இருந்த தமிழக காவல்துறை, இன்றைக்கு திமுகவின் ஏவல் துறையாக செயல்பட்டு வருகிறது. காவல் துறையினருக்கே பாதுகாப்பு கிடையாது. இவர்கள் எப்படி மக்களை பாதுகாப்பார்கள். சென்னையில் கனிமொழி பங்கேற்ற பொதுக் கூட்டத்தில் பெண் காவலருக்கு சிலர் பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளனர்.
மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை, திட்டங்கள் கொடுக்கவில்லையென ஸ்டாலின் அவதூறு பரப்புகிறார். 16 ஆண்டுகாலம் மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்த திமுக அப்போது ஏன் தமிழகத்துக்கு தேவையான திட்டங்களை கொண்ட வரவில்லை. திமுகவை பொறுத்தவரை குடும்பத்துக்கு ஆட்சி அதிகாரம் வேண்டும். சட்டமன்றம், நாடாளுமன்றம் என கருணாநிதி குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் பங்கு பெற வேண்டும். கட்சியிலும் அதே நிலை தான்.
பணமில்லையென கூறும் ஸ்டாலினுக்கு, கார் பந்தயம் நடத்த எங்கிருந்து பணம் வந்தது?. கடலில் 2 கி.மீ. தூரத்தில் ரூ.82 கோடியில் எழுதாத போனாவை வைப்பதற்கு எங்கிருந்து பணம் வருகிறது? உங்களது டிரஸ்ட்டில் பணம் உள்ளது. அதை எடுத்து செலவு செய்யுங்கள். எழுதுற பேனாவை கருணாநிதியின் பிறந்த நாளில் கூட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்குங்கள்.

திமுக ஆட்சி வந்து செய்த ஒரே சாதனை ஸ்டாலின் மகன் உதயநிதியை துணை முதலமைச்சராக ஆக்கினது தான் சாதனை. வேறு எந்த சாதனையும் இல்லை.
இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதல் மாநிலமாக தமிழகம் உள்ளது. திமுக அரசு திவாலாகிவிட்டது. 4 ஆண்டுகளில் 4 லட்சத்து 38 ஆயிரம் கோடி கடன் வாங்கினால், எப்படி தமிழகம் மக்கள் திரும்ப செலுத்துவார்கள்.
தமிழகத்தில் அனைத்தும் விளம்பர மாடல். இவ்வளவு நாள் குடும்பத்துடன் இருந்துவிட்டு, 4 ஆண்டுகளுக்கு பின்னர் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் கொண்டு வந்துள்ளார். உங்களுடன் ஸ்டாலின், நலன் காக்கும் ஸ்டாலின் உள்ளிட்ட திட்டங்களை 4 ஆண்டு ஆட்சிக்கு பின்னர் கொண்டு வந்துள்ளனர்.
அதிமுக ஆட்சியில் அரசு மருத்துவமனையில் சிறந்த மருத்துவம் வழங்கப்பட்டது. திமுக ஆட்சியில் மருத்துவர், செவிலியர் இல்லை. மருந்துகளும் கிடையாது. கால்பந்து வீராங்கனைக்கு தவறான சிகிச்சை அளித்து கால் எடுக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால், அதிமுக ஆட்சியில் கைகள் இல்லாமல் வந்த இளைஞருக்கு செயற்கை கைகள் பொருத்த உதவி செய்தோம்.
அதிமுக ஆட்சி அமைந்தவுடன் முக்கியாக தீபாவளி பண்டிகையையொட்டி பெண்களுக்கு சேலை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டனர்.
.









