திருப்பூர் மணியகாரம் பாளையம் ரோடு காசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கிய மேரி (47). இவரது கணவர் மகேஷ் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவருக்கு 2 மகள்கள் மற்றும் ஹர்சித் (22) என்ற மகன் உள்ளனர். ஹர்சித் பிளஸ்-2 வரை படித்துள்ளார். ஆரோக்கிய மேரி மூத்த மகளுக்கு திருமணமாகி கரூர் வசித்து வருகிறார். 2-வது மகள் கோவையில் தங்கி ஐ.டி. நிறுவனத்தில் பணி புரிகிறார். ஆரோக்கிய மேரி தனது வீட்டின் கீழ் பனியன் நிறுவனம் நடத்தி வந்தார். அவரிடம் ஹர்சித் அடிக்கடி பணம் கேட்டு தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று வீட்டின் மேல் மாடியில் இருந்து ஆரோக்கிய மேரி அலறும் சத்தம் வந்தது. இதனை கேட்டதும் கீழே இருந்த பனியன் நிறுவன ஊழியர்கள் மேலே சென்று பார்த்தனர். அங்கு ஆரோக்கிய மேரியின் மார்பில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அடுத்த அறையில் ஹர்சித் சோகமாக உட்கார்ந்து இருந்தார். இது குறித்து நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஆரோக்கிய மேரி உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது ஆரோக்கிய மேரியை செலவுக்கு பணம் தராததால் அவரது மகன் ஹர்சித் கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. அவரை கைது செய்தனர்.












