கருத்து மாறினால் காட்சி மாறும். அதிமுக மாறினால் ஆட்சி மாறும்.
ஆம். பலவித குழப்பங்களுக்கு பின், இப்போதுதான் தமிழகத்தில் முக்கியமான தெளிவு பிறந்துள்ளது. ஆன்மீகம் வேறு, அரசியல் வேறு. இந்து மதம் வேறு, இந்துத்துவம் வேறு என்ற சிந்தனை வந்திருக்கிறது.
அதுமட்டுமின்றி, ‘தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணம் உண்டு’ என்பதற்கு ஏற்ப , தமிழர்களுக்கென்று தனித்த அரசியல் நிலைப்பாடு உண்டு என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான தமிழ் மக்களின் மனநிலையை அறிந்து கொண்டு அதற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் கட்சியை அவர்கள் ஆதரிக்கின்றனர்.
தற்போது அதற்கான மாற்றம் அதிமுகவிடம் தென்படுகிறது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்பு பாஜகவை பகிரங்கமாக விமர்சிப்பதில் அதிமுக முன்னிலை வகிக்கிறது.
நாணயம் வெளியீடு, கவர்னர் விருந்து நிகழ்வுகளில் திமுக தடம் புரண்ட போது கூட்டணி முற்போக்கு கட்சிகள் கூட மௌனம் சாதித்தன. அதிமுக வரிந்து கட்டிக்கொண்டு வாட்டியது.
புரட்சித் தமிழர் என்று தன்னை அழைத்த பின்பு உண்மையிலேயே எடப்பாடி பழனிச்சாமி அந்த கேரக்டராகவே மாறி வருகிறார். சமீபத்தில் கட்சியில் நடந்த கருத்து பரிமாற்றத்தில் கூட, சிலர் மழுங்கிப் போய் பாஜகவுடன் சேர வேண்டும் என்று வலியுறுத்திய போது அவர் துணிந்து அதை எதிர்த்து நின்றார்.
ஏதோ ஒரு தருணத்தில், தனக்கு மேல் உள்ள தலைவி என்ற முறையில், காலில் விழுந்தோ, தவழ்ந்தோ பதவி பெற்றதை மட்டும் கேலி செய்யும் திமுகவினர், தங்களது சமரசப் போக்கை ஆய்ந்து பார்க்க தவறுகிறார்கள்.

வெளி யே பாஜக அரசின் திட்டங்களை எதிர்த்து, உள்ளே பாஜகவுடன் உறவாடிக் கொண்டிருப்பதையும், மின் மசோதா, என்ஐஏ மசோதாக்களில் ஆதரிப்பதையும், சட்டத்தை சமஸ்கிருத பெயருக்கு மாற்றியதில் முனகலை மட்டும் வெளிப்படுத்தியும், புதிய ஒன்றியத்தின் கல்விக் கொள்கையைப் பொறுத்தவரை, ஒரே மாவில் இட்லி, தோசை சுட்டது போல், அடிப்படை மாற்றம் இன்றி மாநிலக் கல்விக் கொள்கையாக புரட்டிப் போட்டு பித்தலாட்டம் செய்தும் வருகிறதை ( மும்மொழிக் கொள்கை தவிர மற்ற எல்லாவற்றிலும் ஒரே வடிவம் )நடுநிலைகளால் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது.
சட்டம், ஒழுங்கு பிரச்சனை, போதை நடமாட்டம், கருத்துரிமையை காவு வாங்குவது என பல வழிகளில் சாத்வீக சர்வாதிகாரத்தை திராவிட ஆட்சி பயன்படுத்தி வருகிறது.
திராவிடம் என்ற கருத்தியலே புதிய கண்டுபிடிப்பு அல்ல. அது தமிழர்களுக்கே உரித்தான மொழி, இன மற்றும் சீர்திருத்த உணர்வு தான்.

ஆனால், தமிழியம் என்ற அந்த உண்மை தத்துவத்தை திராவிடம் என்று மடைமாற்றி, இன்று வரை அப்படியே ஓட்டுவது தமிழர் உணர்வை மழுங்கடிப்பதற்கே என்று . எல்லோருக்கும் புரிந்து போனது. இந்தியனை அனுசரிக்கும் திராவிடம், தமிழனை ஆதரிப்பது கடினம் என்பதும் ருசுவாகி விட்டது.
திமுகவின் நிலைப்பாடு தமிழருக்கு, தமிழ் மண்ணுக்கு, தமிழ் இனத்துக்கு குந்தகம் செய்யும் என்ற அவநம்பிக்கை பெரும்பாலோருக்கு வந்து விட் டது .இச்சூழலில் அவ்விவகாரங்களில் நம்பிக்கையூட்டுவது போல் நடந்தால் அதிமுகவுக்கு வலு அதிகரிக்கும்.
எடப்பாடி பழனிச்சாமியிடம் மக்கள் கண்ட தவறு, அவரது குழைவான , கோழைத்தனமான அணுகுமுறை, பாஜக கூட்டு என்பதுதான். ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் இப்போது நடப்பதில் அது மங்கி மறைந்து விட்டது. பல்வேறு காலகட்டங்கள் கூட்டணி மாற்றத்திற்கும், கொள்கை நிலைப்பாட்டிற்கும் நல்வாய்ப்புகள் அமைந்தபோதும் அதை பயன்படுத்தாமல் விட்டதால் சட்டமன்ற வெற்றியோடு நாடாளுமன்ற வெற்றியையும் இழந்தார்.
பிறவிப் பார்ப்பனரான ஜெயலலிதா கூட, தமிழ்நாட்டில் பகுத்தறிவு, சமூக நீதி, மொழி,இன உணர்வை கடைப்பிடித்தால் தான் காரியம் ஆகும் என்பதை உணர்ந்து, கடைசியில் அதில் தீவிரமாக இருந்தார், ஓரளவு நற்பெயரும் ஈட்டினார்.
அந்த ஞானோதயம் காலங்கடந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு வந்துள்ளது. இப்போது, வக்ஃபு சட்டத்திருத்தம், குடியுரிமை சட்டம் ஆகியவற்றில் தனது நிலையை மாற்றிக் கொண்டும் , மும்மொழிக் கொள்கையை கடுமையாக எதிர்த்துக் கொண்டும், பாஜகவின் அடிப்படை மதவாதத்தைக் கண்டித்தும் அதிமுக திராவிட, தமிழ் இயக்கங்களின் அபிலாசைக்கு ஏற்றவாறு தமது நிலைப்பாட்டை அதிமுக தகவமைத்து வருகிறது அதிமுக. இதுவே மக்கள் விரும்பும் சரியான அணுகுமுறையாக உள்ளது.
சமக்ர சிக்ஷா பணம் தராமல் பாஜக அரசு இழுத்தடித்ததையும், சமீபத்தில் மகாவிஷ்ணு என்ற போலி நபர் அரசு பள்ளியில் மதப் பிரச்சாரம் செய்ததையும் கண்டித்ததில் எடப்பாடி பழனிச்சாமியின் அரசியல் கண்ணோட்டமும் அறிவுமுதிர்ச்சியும் படுகிறது.
கட்சியை கட்டுப்பாடாக வழி நடத்துவதிலும், நிகழ்ச்சிகள், போராட்டங்களை ஒருங்கிணைப்பதிலும் சிறிது வேகம் தென்படுகிறது.
இதே நிலை தொடர்ந்தால், வரும் தேர்தலுக்குப் பின் தமிழ்நாட்டில் அரசியலில் காட்சி மாறும் என்பதில் ஐயமே இல்லை.














