இப்போதெல்லாம் ஆன்மீகத்தில் அல்ல, அரசியலில் தான் யாத்திரைகள் அதிகம் நடக்கின்றன. அதிலும், ரத யாத்திரை முதல் பல யாத்திரைகளை நடத்தி பலன் கண்ட பாஜகவினர் மாத்திரயை மறந்தாலும் யாத்திரையை மறப்பதில்லை.
அதற்கேற்ப, பாஜக அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் கோவையில் மக்கள் ஆசிர்வாத யாத்திரியை மத்திய இணை அமைச்சர் முருகன் இன்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
அருந்ததியர் சமூதாயத்தில் பிறந்த என்னை பிரதமர் நரேந்திரமோடி இணை அமைச்சராக பதவியேற்று அழகு பார்த்துள்ளார். செருப்பு தைக்கும் தொழிலாளி குடும்பத்தை சேர்ந்த என்னை மாநில தலைவராக்கியது பா.ஜ.க. தமிழகத்தில் எந்த கட்சியும் இதனை செய்ததில்லை.
சமூக நீதியை போற்றுகிறவராக பிரதமர் இருக்கிறார். மத்திய அமைச்சரவையில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 12 அமைச்சர்கள், பழங்குடியினத்தைச் சேர்ந்த 8 அமைச்சர்கள், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த 28 அமைச்சர்கள் உள்ளனர்.
நலத்திட்டங்களை செய்துள்ளதால் மக்களிடம் ஆசியை பெறுவதற்காக இந்த யாத்திரை நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.















