[
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ராமசாமியாபுரம் 1ஆம் தெருவை சேர்ந்தவர் ராம்குமார். இவர் வடக்குப்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வந்தார். இவர் தனது நண்பர்களான குருவிகுளம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த சிதம்பரராஜா, சங்கரன்கோவிலில் பணியாற்றி வந்த கிருஷ்ணகிரியை சேர்ந்த டாக்டர் முத்துகணேஷ், மற்றும் சங்கரன்கோவிலை சேர்ந்த மருந்து விற்பனையாளர் கார்த்திக்குமார் ஆகிய நான்கு பேருடன் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த ஆழ்வார்குறிச்சியை சேர்ந்த டாக்டர் ஒருவரை பார்ப்பதற்காக காரில் சங்கரன்கோவிலில் இருந்து சென்றுள்ளனர். தென்காசி மருத்துவர் கூட்டத்தில் கலந்துகொண்டு கடையத்தில் குளிக்கப் போவதாக சொல்லி புறப்பட்டதாகவும் கூறுகின்றனர்.
கார் தென்காசியை அடுத்த திரவியநகர் அருகே அம்பை சாலையில் சென்ற போது, சாலையோரத்தில் இருந்த நாவல் மரத்தில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் டாக்டர்களான சங்கரன்கோவிலைச் சேர்ந்த ராம்குமார், குருவிகுளத்தை சேர்ந்த சிதம்பரராஜா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த பாவூர்சத்திரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான ராம்குமார் மற்றும் சிதம்பரராஜா ஆகியோரின் உடல்களை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் பலத்த படுகாயமடைந்த டாக்டர் முத்துகணேஷ் மற்றும் மருந்து விற்பனையாளர் கார்த்திக்குமார் ஆகிய இருவரும் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் டாக்டர் முத்துகணேஷ் மேல் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து குறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












