திமுக என்றால் இரும்புக்கோட்டை என்று அக்கட்சியினர் பெருமை பேசிக் கொள்வது வழக்கம். அந்தப் பெருமைக்கு களங்கம்போல, நெல்லை மாநகராட்சி மேயர் மறு தேர்தலில், ‘ கொஞ்சம் விட்டால் ஜெயித்திருப்பார்’ என்பது போல், போட்டி திமுக வேட்பாளர் பவுல்ராஜ் 53க்கு 23 வாக்குகளை (1 ஆப்சென்ட், 1 செல்லாதது) பெற்றிருப்பது திமுக தலைமையையே கவலை அடையச் செய்துள்ளது.
சாதாரணமாக, பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாமல் அரசியல் கட்சியினர் குறிப்பாக கவுன்சிலர்கள் எதுவும் செய்வதில்லை என்பது எழுதப்படாத விதியாயிற்று. இரண்டாம் முறையாக வாக்களிப்பதற்கே தலைக்கு ஒரு லட்சம் கொடுத்து தான் கவுன்சிலர்களை தயார்படுத்தி வைத்திருக்கின்றனர். அதையெல்லாம் கடந்து பவுல்ராஜ் 23 வாக்குகள் பெற்றது எப்படி என்று திமுக தலைமை விசாரணையை முடுக்கி விட்டுள்ளது.
இதுகுறித்து ரகசிய விசாரணையில் இறங்கிய உடன்பிறப்புகள் சிலர், ‘தலைமைக்கு துணை மேயர் மீதுதான் சந்தேகம். தனக்கு எப்படியும் இந்த தேர்தலில் மேயர் சீட் கிடைக்கும் என்று நம்பி, அவருக்கு விசுவாசமான 24 பேருக்கு கட்சி (மேயர் வேட்பாளர்) சார்பில் கொடுத்த தொகையை விட மூன்று மடங்கு தொகையை ஏற்கனவே கொடுத்து வைத்திருந்தார். தனக்கு சீட் கிடைக்காத வேதனையில் ரூட் சேனலை திசை திருப்பி விட்டார் ‘ என்றனர். துணை மேயர் தரப்பினரோ, ‘அவர் கட்சிக்கு மிகப்பெரிய விசுவாசி. அப்படியெல்லாம் செய்திருக்க மாட்டார். அது மட்டுமல்ல பவுல்ராஜுக்கும் ஃ பைனான்ஸ் பண்ண நிறைய பேர் உண்டு ‘ என்கின்றனர்.
நிதி உதவி தவிர, ஒரு குழுவாகவே ரகசியமாக கேன்வாஸ் செய்துள்ளனர். அவ்வாறு தீவிர கேன்வாஸில் இறங்கியதாகவும் ஒரு சிலர் மேல் தலைமைக்கு சந்தேகம் உள்ளது. சந்தேகம் இருந்தும், அதையெல்லாம் ஆராய்ந்தால் மேலும் கட்சிக்கு தான் கெட்ட பெயர் என்று கருதி தலைமை பொறுமை காக்கிறது.
எவ்வாறாயினும், வெள்ளிப் பணத்தின் விளையாட்டு தான் கட்சியின் கட்டுப்பாட்டுக்கு கொள்ளி வைத்தது என்பது உறுதியாகிறது. கட்சியில் பணம் படைத்தோரை கை தூக்கி விட்டதின் பலன் தான் இது. ரத்தமும் வியர்வையும் சிந்தி உழைத்த தொண்டர்களுக்கு இனியாவது மதிப்பு கொடுத்தால் தான் கட்சி உறுதியாக நிலைத்திருக்கும் என்று பரவலாக உடன்பிறப்புகள் பேச தொடங்கி விட்டனர்.












