ராதாபுரம் வெற்றி: ஸ்டாலின் பேசியது சட்ட விரோதமா?

0
820

ராதாபுரம் தொகுதியில் 2016ல் நடந்த தேர்தலில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்ற திமுக வேட்பாளர் அப்பாவு, எதிர்த்து வென்ற அதிமுக இன்பத்துரையின் வெற்றி செல்லாதென்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்தார்.
நீதிமன்றம் விசாரித்து, கடந்த 4ஆம்தேதி இறுதி 3 சுற்று வாக்குப்பதிவு அடங்கிய இயந்திரங்களையும், தபால் வாக்குகளையும் கொண்டுவந்து நீதிமன்ற அரங்கில் வைத்து எண்ணுமாறு உத்தரவிட்டது.
அதன்படி எண்ணிய நிலையில், உச்சநீதிமன்றத்திற்கு சென்று எண்ணிக்கை முடிவை வரும் 23ஆம் தேதி வரை வெளியிட இடைக்கால தடை கேட்டு இன்பத்துரை பெற்றார்.
இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாயலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின் பேசுகையில் விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டசபை தேர்தல்களில் திமுக கூட்டணி கட்சிகளே வெற்றி பெறும். அது போல் ராதாபுரம் தொகுதியின் முடிவையும் இப்போதே சொல்லிவிடுவேன். ஆனால் அது நீதிமன்ற அவமதிப்பாகிவிடும் என்பதால் சொல்லவில்லை.
வரும் 23ஆம்தேதி நாங்குநேரி, விக்கிரவாண்டியோடு சேர்த்து 3 எம்.எல்.ஏக்கள் நமக்கு கிடைப்பார்கள்’ என்றும், ‘ இன்பத்துரை துன்பத்துரையாகிவிட்டார்’ என்றும் பேசினார்.
இதை கண்டித்த அதிமுக அமைச்சர்கள், இப்பேச்சு நீதிமன்ற அவமதிப்பு என்றும், இதுகுறித்து நீதிமன்றத்தில் முறையிடப்போவதாகவும் கூறினர். அமைச்சர் கடம்பூர் ராஜூ, ‘ ஸ்டாலின் இன்பத்துரையை துன்பத்துரை என்று பேசி துன்பத்தை விலை கொடுத்து வாங்கிவிட்டார்’ என்றார்.

இதுகுறித்து இன்பத்துரை பேசுகையில், ‘ ஸ்டாலின் குற்றமுறு எண்ணத்துடன்தான் பேசியுள்ளார். இது அவதூறுக்கு ஏதுவான பேச்சு. எனவே, உச்சநீதிமன்றத்தில் முறையிடுவேன்’ என்றார்.
ஸ்டாலின் பேசியது சட்டவிரோதமா, நீதிமன்ற அவமதிப்புக்குள் வருமா? என்று வழக்கறிஞர்களிடம் கேட்டோம்.
இதுகுறித்து கருத்து கூறிய நெல்லை வழக்கறிஞர் ஜாபர் அலி ,, ‘ ஸ்டாலின் சொன்னது தவறில்லை. நாளைய ஆட்சி நம் ஆட்சி என்று கட்சிக்காரர்கள் சொல்வதில்லையா? அதுபோல்தான் இது’ என்றார்.
மதுரை வழக்கறிஞர் விஷ்ணுவர்தன் கூறுகையில், ‘ எந்த வழக்கிலும் அது தொடங்கியது முதல் முடியும் வரை வெற்றி எனக்குத்தான் என்று வாதியும் பிரதிவாதியும் சொல்லிக்கொண்டேயிருப்பர். அது தவறில்லை. ஆனால், நீதிமன்ற முடிவு வரும் தருணத்தில் இருக்கும் முக்கிய, சர்ச்சைக்குரிய வழக்கில், பொறுப்புள்ள எதிர்கட்சி தலைவரான ஒருவர் எந்த முகாந்திரத்தில் இப்படி கூறினார் என்பது ஆராய்வதற்குரியது. இது நீதிமன்ற மாண்பை குறைக்கவும், மக்களிடம் இதுபற்றி ஒருவித கருத்து உருவாகவும் வழி வகுக்கும் என்பதை மறுக்க முடியாது’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here