கிராமசபை போல் மாநகர சபை கூட்டம்: அறுக்கமாட்டாதவன் கையில்..?

0
292

அறுக்கமாட்டாதவன் கையில் ஆயிரத்தெட்டு அரிவாளாம். உள்ளாட்சி என்ற தன்னாட்சி அதிகாரம் படைத்த அமைப்புகளை ஒன்றிய, மாநில அரசின் உத்தரவுகளை நிறைவேற்றும் அமைப்பாக மாற்றிய பின்பு, அரசு சார்பில் அனுமதிக்கப்படும் ஆள்விழுங்கி, மலை விழுங்கி, ஆறு விழுங்கி திட்டங்களுக்கு அனுமதி தரும் ரப்பர்ஸ்டாம்புகளாக அவற்றின் நிர்வாகம் மாறிவிட்டது.


கிராமசபையில் இயற்றும் தீர்மானங்களை செயல்படுத்துவதை விட, பிரச்சினைக்குரிய நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் பெறவே கிராம சபை கூட்டத்தை ஊராட்சி நிர்வாகம் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இதில், கிராமசபை என்ற ஒன்றை கூட்டி சம்பிரதாயத்துக்கு தீர்மானம் போட்டு ஜனநாயகத்தை காப்பாற்றுவதாக தம்மைத் தாமே பாராட்டிக்கொள்கின்றனர்.


கிராம சபை என்பது மக்களவைக்கு இணையானது என உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் கூறியிருக்கிறது. இது இந்திய அரசியல் சாசனத்தால் உருவாக்கப்பட்ட சபை. மேலும், கிராம சபைக்கு மாநிலச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட, அதன் அதிகாரத்திற்கு உட்பட்டு எடுக்கும் முடிவுகளை யாராலும் மாற்ற இயலாது என்கிறார்கள். ஆனால், ஸ்டெர்லைட்டை எதிர்த்தும், கூடங்குளம் அணு உலையை எதிர்த்தும், மதுபானக்கடைகள் அமைப்பதை எதிர்த்தும் போடப்பட்ட பல்வேறு கிராமத் தீர்மானங்களுக்கு கிடைத்த மதிப்பை நாம் அறிந்தோம்.


இந்த லட்சணத்தில், தமிழ்நாட்டில் கிராமசபை கூட்டங்கள் இனி ஆண்டிற்கு 6 முறை நடைபெறும் என்று சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் விதி எண் 110ன் கீழ் பேசிய போது அறிவித்தார்.


அதையே செரிக்க முடியாத நிலையில், மாநகராட்சி, நகராட்சி சபையும் கூட்டப்படும் என்று இப்போது அறிவித்துள்ளார். பெரிய அமைப்பாகிய நகராட்சி, மாநகராட்சியில் எந்த வார்டு தீர்மானத்தை எந்த மக்கள் ஒப்புக்கொண்டு எப்படி செயல்படுத்தப்படும்? ஆளுங்கட்சி பொதுக்கூட்டத்தை அரசு செலவில் நடத்துவதாகவே அது அமையும்.ஏற்கனவே சிற்றூராட்சி கிராம சபைகளுக்கு வழங்கப்படும் தொகையும் கூட்டத்துக்கு வரும் ஒன்றிய அலுவலர்களை உபசரிக்கவே செலவழிக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு பச்சை தண்ணீர் கூட கொடுப்பதில்லை.


மனு நீதி நாள் என்று திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடத்தும் கூட்டங்களில் பெறும் மனுக்களுக்கு என்ன மரியாதை அளிக்கப்படுமோ, அந்த மரியாதை தான் கிராம சபை கூட்டங்களுக்கும் ஏற்படும்.
ஏற்கனவே தேர்தலுக்கு முன்பு ஸ்டாலின் கிராமங்கள் தோறும் சென்று பெற்ற மனுக்களுக்கு இன்னும் முழுத்தீர்வு கிடைக்கவில்லை. ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் மூலமும் கோரிக்கை மூலமும் மக்கள் வெளிப்படுத்தும் பிரசினைகளுக்கு இன்னும் தீர்வில்லை. இந்த லட்சணத்தில் நகரசபை, மாநகர சபை கூட்டங்களும் விரையமாகவே ஆகும் என்பதே அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.

‘உள்ள முடிக்கே எண்ணெய்யை காணோம், சவுரிக்கு கேசவர்த்தினி கேட்கிறதா?’ என்பது போலத்தான் இதுவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here