கழிமுகமா கழிவுமுகமா? ஆத்தூர் அருகே தாமிரபரணியில் கலக்கும் சாக்கடை வெள்ளம்

0
1596

பொதிகையில் தொடங்கி புன்னைக்காயலில் தனது பயணத்தை முடிக்கும் தாமிரபரணியின் கழிமுகப்பகுதி ஆத்தூர் முதல் புன்னைக்காயல் வரை நீள்கிறது. ஆத்தூரை அடுத்து தாமிரபரணியில் பல்வேறு தனியார் நிறுவனங்களின் நீரேற்று நிலையங்கள் இருக்கின்றன.


அதில் தாரங்கதாரா கெமிக்கல் நிறுவன நீரேற்று நிலையம் அருகே பொதுமக்கள் நீராடும் படித்துறை உள்ளது. அந்த படித்துறை அருகே ஆத்தூர், வடக்கு ஆத்தூர் வீடுகள், தொழிலகங்களின் மொத்த கழிவுகளும் பாய்ந்தோடிக் கலக்கின்றன. நொடிக்கு 20 லிட்டருக்கு மேல் கலக்கும் இந்த சாக்கடை நீர் அப்பகுதி ஆற்றுநீரை முழுதும் கெடுத்துவிடுவதால் துர்நாற்றம் வீசுகிறது. கழிமுகப்பகுதி என்பதால் கொழித்து வளர்ந்த நீர்வாழ் உயிரினங்களும் மீன்களும் அடிக்கடி செத்து மிதக்கின்றன.

கோடைக் காலங்களில் ஆற்றில் நீர் வரத்து இல்லாதபோது முழுதும் இந்த சாக்கடை நீரே ஆற்றில் ஓடுகிறது. அப்போது ஆற்றின் அருகிலேயே செல்லமுடியாது என்று அப்பகுதி மக்கள் முகம் சுழிக்கின்றனர்.

ஏற்கனவே, ஆலைக்கழிவு, இறால் பண்ணை வேதிக் கழிவுகளால் கழிமுகத்தை அடுத்த கடற்பகுதி முற்றிலும் சீரழிந்து வருகிறது. அதற்கு இணையாக இந்த கழிவுகள் வெள்ளமென பாய்ந்து தாமிரபரணியின் தன்மையை மாற்றுகிறது. கழிமுகப்பகுதி மீன் பிடித் தொழிலும் இதனால் பாதிப்படைகிறது. படித்துறையில் இறங்கி குளிக்கும் மக்கள் தோல் நோயால் அவதியுறுகின்றனர்.


எனவே, உடனடியாக சாக்கடை வெள்ளத்தை நிறுத்தவேண்டும். ஏதோ, அருவி நீரை ஆற்றில் விடுவது போல் சுற்றுச்சூழல் சட்ட விதிகளுக்கு மாறாக மதகு அமைத்து கழிவை கலக்கும் உள்ளாட்சி நிர்வாகங்கள், பாதாள சாக்கடை திட்டம் மூலம் வேறிடம் கழிவு நீரை கொண்டு சென்று சுத்திகரித்து மறு சுழற்சி செய்யவேண்டும். இல்லையேல், கேடு விளைவிக்கும் பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகங்களை கண்டித்து கடுமையான போராட்டம் நடத்த நேரிடும் என தாமிரபரணி பாதுகாப்பு இயக்க செயலாளர் மணிவண்ணன் எச்சரித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here