மதுரை அருகே திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட மாவிலிபட்டி கிராமத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் அருகில் உள்ள தென்பழஞ்சி கிராமத்தின் கண்மாய்க்கு நீர் வரத்து அதிகமாக உள்ளது. இதனால், திருப்பரங்குன்றத்திலிருந்து மாவிலிபட்டி கிராமத்திற்கு செல்ல தென்பழஞ்சி சாலையை பயன்படுத்த வேண்டியுள்ளது. இந்த சாலையில் இருபுறமும் தண்ணீர் சூழ்ந்து இருப்பதால் பொது போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
மாவிலிபட்டி கிராம மக்கள் இந்த சாலை வழியாகத்தான் மதுரைக்கு செல்ல திருப்பரங்குன்றம், பெரியார் பேருந்து நிலையம், ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி, சிம்மக்கல், பழம் மார்க்கெட், காய்கறி சந்தை, திருமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்றடைய முடியும். மேலும், இங்குள்ள 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திருநகர் மற்றும் திருப்பரங்குன்றம் பள்ளிகளில் படித்து வருகின்றனர்.
இவர்கள், இதற்கு முன்பு அரசுப் பேருந்து மூலம் பள்ளி சென்று திரும்பிய நிலையில் சாலை தண்ணீரில் மூழ்கியுள்ளதால் பேருந்து இயக்கப்படவில்லை. எனவே, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் காலை, மாலை இரு வேளையும் மாவிலிபட்டி கிராமத்திலிருந்து தென்பழஞ்சி வரை 2 கிலோ மீட்டர் தூரம் தண்ணீரில் ஆபத்தான முறையில் நடந்து சென்று பள்ளி சென்று திரும்புகின்றனர்.
எனவே, மாற்றுப் பாதையில் பேருந்து இயக்கப்பட வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.













