கோவை சுந்தராபுரம் சாரதாமில் ரோடு பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் செந்தில் பிரபு (46). இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த நபர் ஒருவர் செந்தில் பிரபுவிடம் தீப்பெட்டி கேட்டுள்ளார். அதற்கு அவர் தன்னிடம் தீப்பெட்டி இல்லை என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் கல்லை எடுத்து சாக்கடை குழியில் வீசினார். இதனால் சாக்கடை தண்ணீர் செந்தில் பிரபுவின்
உடையில் தெரித்தது.
இதையடுத்து செந்தில் பிரபு அந்த நபரிடம் எதற்காக கல்லை வீசி சாக்கடைத் தண்ணீரை தெறிக்க வைத்தாய்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் .இதையடுத்து ஆத்திரம் அடைந்த அந்த நபர் அங்கிருந்து தனது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து செந்தில் பிரபுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அவர்கள் செந்தில் பிரபுவை பலமாக தாக்கினர். மேலும், செந்தில் பிரபு கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்க சங்கிலியை பறித்து தப்பிச்சென்றனர். இதையடுத்து காயமடைந்த செந்தில் பிரபு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தொடர்ந்து போத்தனூர் போலீஸ் ஸ்டேஷனில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில் செந்தில் பிரபு மீது தாக்குதல் நடத்தியவர்கள் அதே பகுதியை சேர்ந்த தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தினேஷ் மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.
கோவை மேட்டுப்பாளையம் சாலை எம்ஜிஆர் மார்க்கெட் முன்புறம் விநாயகர் டிபன் கடை என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு சிவகங்கை மாவட்டம் மேலப்படுவூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் ரஞ்சித் (21) என்பவர பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு 2 வாலிபர்கள் கடைக்கு வந்து டிபன் சாப்பிட்டு வெட்டு வெளியே சென்றனர். அப்போது ரஞ்சித் அவர்களிடம் பில் தொகையை கேட்டுள்ளார் .
உணவு சாப்பிட்ட வாலிபர் ஒருவர் பணம் ஏற்கனவே கொடுக்கப்பட்டு விட்டது என்று கூறியுள்ளார். ஆனால் அதற்கு ரஞ்சித் மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் சாப்பிட வந்த இரண்டு வாலிபர்களும் கடை உரிமையாளர் மற்றும் ரஞ்சித்திடம் தகராறில் ஈடுபட்டனர். தகராறு முற்றிய நிலையில் கடையில் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பாட்டில்களை, டேபிள்களை அடித்து உடைத்தனர்.
இதையடுத்து ரஞ்சித் சாய்பாபா காலனி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரின் மகன் நவீன்( 27 )மற்றும் அவரது நண்பர் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகன் கார்த்தி (27) என்பது தெரியவந்தது. நவீனை கைதுசெய்தனர். தப்பி ஓடிய கார்த்தியை தேடி வருகின்றனர்.













