கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு தொடர்ந்து கல், மணல் போன்ற கனிமங்கள் கடத்தப்படுகின்றன. கண்காணிப்பு காமிரா உள்ள செக் போஸ்டுகள் இருந்தும் துணிச்சலாக ஒரே பதிவெண் கொண்ட பல டாரஸ் லாரிகளை இந்த கனிமவளக்கடத்தலுக்கு பயன்படுத்துகின்றனர். அனைத்து லாரிகளிலும் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றிச் செல்கின்றனர். புகார் வந்தால் மட்டும் 10 டன்னுக்கு 1 டன்னை கணக்கு காட்டி சம்பிரதாயத்துக்கு அபராதம் அடிக்கின்றனர்.
இதேபோல் அதிக பாரம் ஏற்றிய டாரஸ் லாரி ஒன்று மார்த்தாண்டம் மேம்பாலத்தில் சென்ற போது அதிலிருந்த பாறாங்கல் பறந்து வந்து மேம்பால சாலையிலேயே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக பின்னால் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தம்பதியினர் மயிரிழையில் உயிர் தப்பினர். அதுமட்டுமல்ல, நேற்று அதிகாலை நான்கரை மணி அளவில் இரவிபுதூர்கடை அருகே அதிக பாரம் ஏற்றிச் சென்ற கனிமவள டாரஸ் லாரி விபத்தில் சிக்கியது. நல்லவேளையாக டிரான்ஸ்பார்மரில் மோதாமல் தப்பியது.

அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனிமவள லாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாததாலே இதுபோன்று தொடர் விபத்துகளில் சிக்கி அசம்பாவிதங்கள் நடக்கின்றன. நெல்லை மாவட்டத்தில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடி வழியே தான் வருகிறது. அங்கு நிறுவப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவின் இணைப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ளது.
ஆரல்வாய்மொழி சோதனை சாவடியை கடந்தாலும், தமிழக கேரள எல்லைப்பகுதியான களியக்காவிளை சோதனைச் சாவடியை தாண்டியே கேரளாவுக்கு செல்லமுடியும். அங்கும் இத்தகைய கண்காணிப்பு வசதி இருக்கிறது.
ஆனால், ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் மாதாமாதம் குறிப்பிட்ட தொகை மாமூலாக சென்று விடுவதாகவும் மற்றும் உயர் அதிகாரிகளுக்கும் லம்பான மாமூல் தொகை கை மாறுவதாகவும் பொதுமக்கள் பகிரங்கமாக குற்றஞ்சாட்டுகின்றனர்.
