கோவை பாலசுந்தரம் சாலை அண்ணா சிலை அருகில் உள்ள காவலர் பயிற்சி வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில், காவலர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்புகள், உயரதிகாரிகள் தங்கும் மாளிகை, சிபிசிஐடி உட்பட புலனாய்வு அமைப்புகளின் அலுவலகம் அமைந்துள்ளது.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து நபர் ஒருவர், காவலர் பயிற்சி பள்ளி வளாகத்திற்கு வெடிகுண்டு வைக்கப்போவதாக மிரட்டல் விடுத்தார்.
உடனே, வெடிகுண்டு செயல் இழப்பு பிரிவினர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் சோதனை நடத்தினர். பின் மிரட்டல் போலியானது என்பதை உறுதி செய்த காவல்துறையினர், அழைப்பு வந்த செல்போன் எண் மூலம் விசாரித்தனர்.
விசாரணையில், தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர், புலியகுளத்தை சேர்ந்த மோகன காந்தி(46) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வசிக்கும் கிரேடு 2 காவலராக உள்ள விமல்ராஜின் சகோதரி கணவரான மோகனகாந்தி குடிபோதையில் குடும்ப பிரச்சினை காரணமாக வெடிகுண்டு வைக்கப்போவதாக மிரட்டியுள்ளது தெரியவந்தது..
கோடநாடு கொலை, கொள்ளை குறித்த விசாரணை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்று வரும் நிலையில், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.













