ரவிசாஸ்திரி….. சமீபத்தில் இந்திய கிரிக்கெட்டில் அதிகமாக உச்சரிக்கப்பட்ட பெயர் இது தான். உலகக்கோப்பை கிரிக்கெட் தோல்வி எதிரொலியாக ரவிசாஸ்திரியின் பயிற்சியாளர் பதவி பறிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஒரு பக்கம் எழுந்தாலும், கேப்டன் விராட் கோலி மற்றும் சக வீரர்களின் ஆதரவு சாஸ்திரிக்கு வலுவாக இருந்தது.
கபில்தேவ் தலைமையிலான கமிட்டி 5 பேரிடம் நேர்காணல் நடத்தி இறுதியில் ரவிசாஸ்திரியையே இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் தேர்வு செய்திருக்கிறது. ஒரு மோசமான நாளை (உலகக்கோப்பை அரைஇறுதியில் தோல்வி) வைத்து இந்த அணியை மோசமானதாக நினைக்கக்கூடாது என்ற ரவிசாஸ்திரியின் வாதமும், தகவல் தொடர்பு திறமை மற்றும் அணியின் பிரச்சினைகளை எளிதில் புரிந்து கையாள்வதிலும், அணியை முன்னெடுத்துச் செல்வதில் அவர் கொடுத்த திட்டங்களும் அவருக்கு மறுபடியும் இந்த சிம்மாசனத்தை தேடிக் கொடுத்திருக்கிறது.
கடந்த முறை ஆண்டு ஊதியமாக அவர் ரூ.8 கோடி பெற்றார். இப்போது அவரது சம்பள விவரம் வெளியிடப்படவில்லை. என்றாலும் இதை விட சற்று அதிகமாகவே இருக்கலாம்.
இந்திய முன்னாள் வீரரான ரவிசாஸ்திரி 2017-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து பயிற்சியாளர் பணியை கவனிக்கிறார். இப்போது அந்த பதவி மேலும் 2 ஆண்டுகளுக்கு அதாவது 2021-ம் ஆண்டு நவம்பர் வரை நீள்கிறது.
ரவிசாஸ்திரி பயிற்சி காலத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் முதல்முறையாக டெஸ்ட் கிரிக்கெட் தொடரை வென்று சரித்திரம் படைத்தது. அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி 21 டெஸ்டுகளில் பங்கேற்று அதில் 13-லிலும், 36 இருபது ஓவர் போட்டிகளில் 25-லிலும், 60 ஒரு நாள் போட்டிகளில் 43-லிலும் வெற்றி கண்டிருக்கிறது.
கேப்டன் கோலியின் ஆதரவு ரவிசாஸ்திரிக்கு இருந்தாலும் இந்த தடவை அவருக்கு நிறைய சவால்கள் காத்திருக்கின்றன என்று தான் சொல்ல வேண்டும்.
ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு 4-வது பேட்டிங் வரிசை நீண்ட கால தலைவலியாக இருக்கிறது. 2015-ம் ஆண்டு உலககோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு இந்த நாள் வரைக்கும் 14 பேரை அந்த இடத்தில் பரிசோதித்து பார்த்தாகி விட்டது. ஆனாலும் அந்த வரிசைக்கு என்று நிலையான பேட்ஸ்மேனை அடையாளம் காண முடியவில்லை. சாஸ்திரியின் முதல் வேலை இதை சரி செய்வதாகத்தான் இருக்கும். ஸ்ரேயாஸ் அய்யர் அந்த இடத்திற்கு பொருத்தமானவராக இருப்பார், தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று அவர் சொல்கிறார். அவரது கணிப்பு துல்லியமாக இருக்குமா? என்பதை போக போகத் தான் பார்க்க வேண்டும்.
அடுத்து இந்திய முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான 38 வயதான டோனியின் எதிர்காலத்தை தீர்மானித்து ஒரு தீர்க்கமான முடிவுக்கு வர வேண்டி உள்ளது. இங்கிலாந்தில் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியுடன் டோனி விடை பெறுவார் என்று எதிர்பார்த்த வேளையில், காஷ்மீரில் ராணுவத்துடன் இணைந்து சேவையாற்ற செல்கிறேன், அதனால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஆடமாட்டேன், இரண்டு மாதம் ஓய்வு தேவை என்று தற்காலிகமாக ஒதுங்கி இருக்கிறார்.
டோனியை பொறுத்தவரை அவரது விக்கெட் கீப்பிங் அனுபவமும், ஆலோசனைகளும் நெருக்கடியான தருணங்களில் அணிக்கு அனுகூலமாக இருக்கிறது. சிக்கலான கட்டத்தில் கேப்டன் கோலிக்கு வழிகாட்டியாக இருக்கிறார். ஆனால் அவரது பேட்டிங் முன்பு போல் அதிரடியாக இல்லை என்பது தான் பிரச்சினை. சில நேரங்களில் அவரது மந்தமான பேட்டிங்கே அணியின் வெற்றிக்கும் உலைவைத்து விடுகிறது.
அது மட்டுமின்றி, 21 வயதான விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டை அவரது இடத்திற்கு தயார்படுத்தும் பணி ஏற்கனவே தொடங்கி விட்டது. அதனால் டோனியின் நிலைப்பாடு என்ன என்பதை அறிந்து அதற்கு ஏற்ப கேப்டனின் துணையோடு அணியை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி செல்வதில் பயிற்சியாளர் சாஸ்திரி முயற்சி மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
சர்வதேச அளவில் கணிசமான வெற்றிகளை குவித்தாலும் சில ஆண்டுகளாக ஏனோ இந்திய அணிக்கு ஐ.சி.சி. தொடர் என்றாலே கசப்பாகி விடுகிறது. 2013-ம் ஆண்டு ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணி ஐ.சி.சி. தொடர்களில் தகிடுதத்தம் போடுகிறது என்பதே உண்மை.
2015, 2019-ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை போட்டிகளில் அரைஇறுதியில் வீழ்ச்சி, 2017-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை இறுதி ஆட்டத்தில் படுதோல்வி, 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் 2014-ம் ஆண்டு இறுதி சுற்றிலும், 2016-ம் ஆண்டு அரை இறுதியிலும் தோல்வி என்று இந்திய ரசிகர்களுக்கு தொடர்ந்து ஏமாற்றமே மிஞ்சி வருகிறது. இந்த சோகத்துக்கு முடிவு கட்ட வேண்டிய நெருக்கடியும் சாஸ்திரிக்கு உண்டு.
அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி அடுத்து 2020-ம் ஆண்டு 20 ஓவர் உலகக்கோப்பை, 2021-ம் ஆண்டு சொந்த மண்ணில் 20 ஓவர் உலகக்கோப்பை மற்றும் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போன்ற ‘மெகா’ தொடர்களில் விளையாட உள்ளது. இவற்றில் ஏதாவது ஒன்றிலாவது மகுடம் சூடாவிட்டால் கோலி-சாஸ்திரி கூட்டணி ‘ஆட்டம்’ கண்டு விடும் என்பதில் சந்தேகமில்லை!