,
கோவை சரவணம்பட்டி அடுத்த சிவானந்தபுரம் பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் ராஜேந்திரன் (42 ).இவருக்கும் செல்வி (35) என்பவருக்கும் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 2009ஆம் ஆண்டு ராஜேந்திரன் தனது சொந்த ஊரில் பாலகிருஷ்ணன் என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஏழு ஆண்டுகள் தண்டனை கிடைத்து சிறையில் இருந்து வந்தார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சிறையிலிருந்து அவர் விடுதலையானார் .அதன்பிறகு கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஒரு மீன் கடையில் கடந்த ஒரு மாதமாக வேலை செய்து வந்தார் .
சிறையிலிருந்து வெளியில் வந்ததிலிருந்து மனைவி செல்வியின் நடத்தை குறித்து ராஜேந்திரனுக்கு சந்தேகம் எழுந்தது. இது குறித்து அடிக்கடி அவருடன் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று ராஜேந்திரன் சாணி பவுடர் குடித்து வீட்டின் முன்பு மயங்கிய நிலையில் கிடந்தார். இதையடுத்து அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது மனைவி செல்வி சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் ராஜேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.













