விழுப்புரம் மாவட்டம் மூங்கில் துறைப்பட்டு அருகே உள்ள ஈருடையாம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஆரோக்கியராஜ்க்கும் ( 30) மங்கலம் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த அந்த பெண், கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் தற்கொலை செய்து கொள்வது என முடிவு செய்த ஆரோக்கியராஜ் தனது செல்போனில் வீடியோ ஒன்றை எடுத்தார். அந்த வீடியோவில், ‘எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள்‘ என்று கூறியபடி தான் வாங்கி வைத்திருந்த விஷத்தை மதுவுடன் கலந்து குடிக்கும் காட்சி பதிவாகியிருந்தது. மேலும் அந்த வீடியோ பதிவை தனது உறவினர் ஒருவரின் வாட்ஸ்-அப்பிற்கு ஆரோக்கியராஜ் அனுப்பினார். இதற்கிடையே அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வீட்டில் உள்ள அறையில் மயங்கி கிடந்த ஆரோக்கியராஜை மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று ஆரோக்கியராஜ் உயிரிழந்தார். விஷம் குடிப்பதை வீடியோ எடுத்து உறவினருக்கு அனுப்பி விட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.















