டெல்லியில் காவல் தலைமை அலுவலகத்தை சீருடையுடன் போலீசார் முற்றுகையிட்டனர்.
கடந்த 2ஆம்தேதி டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் போலீசார் வழக்கறிஞரிடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதலில் 20 போலீசாரும் 8 வழக்கறிஞர்களும் காயமடைந்தனர். பல வாகனங்கள் தீக்கிரையாகின.
இது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், காவல்துறை அதிகாரிகள் இருவரை பணியிடமாற்றம் செய்ய உத்தரவிட்டது. கலவரம் குறித்து 6 மாதத்துக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.பி.கார்க்கை நியமித்தது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வழக்கறிஞர்களை சந்தித்த டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், அவர்களின் மருத்துவ செலவுகளை அரசே ஏற்கும் என்று தெரிவித்தார்.
இதனால் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த போலீசார் ஆத்திரமடைந்தனர். போலீசார் மீதான தாக்குதலுக்கு தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் கண்டனம் தெரிவித்தது. சட்டத்திற்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அச்சங்கம் வலியுறுத்தியது.
இந்நிலையில், டெல்லியில் இன்று காலை பணியை புறக்கணித்துவிட்டு திடீரென கூடிய போலீசார், காவல் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பெரும்பாலானோர் சீருடையுடன் கலந்துகொண்டனர். வெகுநேரம் போராட்டம் நீடித்தது, இரவு 7 மணிக்கு போராட்டம் திரும்ப பெறப்பட்டது. சுதந்திர இந்தியாவில் போலீசார் நடத்தியுள்ள முதல் போலீஸ் போராட்டம் இதுவாகிறது.















