தி.மு.க பிரமுகரான வழக்கறிஞர் ஜோயலை நாகராஜன் என்ற பெயரில் தொடர்பு கொண்ட நபர், உதயநிதி ஸ்டாலின் பேசச் சொன்னதாகக் கூறி தனது குழந்தை உடல் நிலை சரியில்லாமல் இருக்கக்கூடிய புகைப்படம் மற்றும் மருத்துவச் சீட்டை அனுப்பி பண உதவி கேட்டுள்ளார். இதனை நம்பிய ஜோயல் அவரது வங்கி கணக்கிற்கு 15 ஆயிரம் ரூபாய் அனுப்பினார்.
பின் அது குறித்து ஜோயல் விசாரித்தபோது தன்னை தொடர்புகொண்ட நபர் மோசடி செய்து ஏமாற்றி பணம் பறித்தது அவருக்கு தெரிய வந்தது. இதனையடுத்து இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.

மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி நாகராஜன் என்ற பெயரில் தி.மு.க பிரமுகரான ஜோயலை அழைத்துப் பேசிய பாண்டிச்சேரியைச் சேர்ந்த சிவகுமார் என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், சிவகுமார் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் எம்.பி விஜய்வசந்த், சீமான் என கட்சி பேதமின்றி பல பேருக்கு மருத்துவமனையில் இருக்கக்கூடிய குழந்தையின் புகைப்படம் மற்றும் மருத்துவச் சீட்டை காண்பித்து சுமார் 3 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்தது தெரியவந்தது.
இவர் மோசடி செய்வதற்கு பயன்படுத்திய 2 செல்போன்கள் மற்றும் சிம் கார்டுகளையும் பறிமுதல் செய்த போலீசார் அவற்றை சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து சிவகுமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சிவக்குமார் தனது மனைவியின் வங்கி கணக்கை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து சிவ குமார் மோசடி செயலுக்கு பயன்படுத்திய வங்கி கணக்கை சைபர் கிரைம் போலீசார் முடக்கியுள்ளனர்.
மோசடி செய்த பணத்தை ரம்மி விளையாட்டு மூலம் இழந்ததாக சிவகுமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.ஆனாலும், பணத்தை பதுக்கி வைத்துள்ளாரா? எனவும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.















